யுவனுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும், விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை என இயக்குநர் இளன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிஜிஎம் கிங் என யுவன் ஷங்கர் ராஜாவை அழைப்பார்கள். அப்படிப்பட்ட யுவன் ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் இசையமைக்கும் படங்களில் பாடல்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் விஜய் நடித்துள்ள "The Greatest of All Time" படத்தில் விசில் போடு பாடல் யுவன் இசையில் வெளியானது.
இந்த பாடலை விஜய் பாடியிருந்த நிலையில், இதில் எதுவுமே சரியில்லை என ரசிகர்கள் தாறுமாறாக யுவனை விமர்சனம் செய்தனர். அவர் பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்படியான நிலையில் ஸ்டார் படத்தின் இயக்குநரான இளன் யுவன் ஷங்கர் ராஜா பற்றி பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில், “ஒரு காலக்கட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா மிக பிரபலமாக இருந்தார். இப்ப அவர் இசையமைக்கும் படங்களை பார்க்கும்போது பழைய யுவன் வேண்டும் என கேட்கிறார்கள். புதிதாக படம் இயக்குபவர்களின் படங்களில் யுவன் இசையில் நல்ல பாடல்கள் கிடைக்கிறது. ஆனால் அனுபவ இயக்குநர்கள் படங்களில் அப்படி கிடைப்பதில்லை. அது ஏன் என கேட்டிருக்கிறீர்களா?” என இயக்குநர் இளனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நான் யுவனிடம் எல்லாம் வெளிப்படையாக கேட்பேன். பெயர் சொல்ல விரும்பாமல் இதற்கு பதில் சொல்கிறேன். ஒரு பெரிய படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். அவரின் இசையை கேட்டுவிட்டு படத்தரப்பு அந்த பாடல் வேண்டாம் என சொல்கிறார்கள். எதிர்தரப்பு அது ஏன் என்பதற்கான காரணம் சொல்ல வேண்டும். அப்போது தான் வேற ஒரு ட்யூன் கொடுக்க முடியும். யுவனும் வேறு ஒரு ட்யூன் மாற்றி கொடுப்பார்.
ஆனால் யுவனை பொறுத்தவரை வாழ்க்கையின் சூழலை ஒரு கடினமான ஒன்று என நினைக்க மாட்டார். எல்லாவற்றையும் மேலோட்டமாக தான் பார்ப்பார். உங்களுக்கு இந்த பாட்டு வேணுமா, சரி தருகிறேன் என தனக்கு பிடிக்காவிட்டாலும் இசையமைத்து தருவார். அது நன்றாக இல்லாத பட்சத்தில் யுவனுக்கு தான் கெட்ட பெயர். ஆனால் அதை அவர் மனதில் வைக்க மாட்டார். மத்த இசையமைப்பாளர்கள் எல்லாரும் தங்களை சரியாக இருக்க வேண்டும் என நிரூபிக்க மெனக்கெடுவார்கள். ஆனால் யுவனுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும், விருது வாங்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பெல்லாம் கிடையாது.
அப்படி யுவன் இசையமைத்த எந்த பாட்டை வேண்டாம் என சொன்னார்களோ, அந்த பாடல் இன்னொரு படத்தில் இடம்பெற்று சூப்பர்ஹிட்டானது. எனக்கும் அந்த பாட்டு பிடித்தது. என்னை பொறுத்தவரை நான் யுவனிடம் எனக்கு பிடித்த பாடல் எல்லாம் கேட்க மாட்டேன். அவருக்கு பிடித்திருந்தால் எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புவேன். அப்படி யுவனை எல்லாரும் நம்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்” என இயக்குநர் இளம் கூறியுள்ளார்.