உதகையில் பிரபல நடிகர் விஜய் விஷ்வா, தான் சாப்பிட்ட ஹோட்டல் உணவில் புழு இருந்ததாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபி சரவணன். இவர் குட்டிப்புலி, கேரளா நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம் டா, சாயம் என ஏகப்பட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2021ல் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை தாக்கிய மிக்ஜாம் புயலின்போது கை உடைந்த நிலையிலும் தூத்துக்குடி மக்களுக்கு இடுப்பளவு தண்ணீரில் இறங்கி உதவி செய்தது பாராட்டுகளைப் பெற்றது. இப்படியான நிலையில் இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் விஷ்வா, தான் 3 நண்பர்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் அங்குள்ள Mciver villa என்ற ஹோட்டலில் சாப்பிட சென்றோம். அப்போது அங்கிருந்த சாஸ் பாட்டிலை பயன்படுத்தினோம். இதனைத் தொடர்ந்து உணவில் கெட்ட வாடை அடிக்கவே, சாஸ் பாட்டிலை திறந்து பார்த்தோம். அதில் முழுக்க புழுவாக இருந்தது. இதனால் என் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து வாந்தியெடுத்தனர். மேலும் இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தை கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதிலளித்தனர். மேலும் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இதனை நான் ஊடகம் வழியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன் என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நடிகர் விஜய் விஷ்வாவின் இந்த புகார் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள உதகை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, “விஜய் விஷ்வா வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.