'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ கருங்காப்பியம்’ . இந்த திரைப்பத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இது உருவாகி வருகிறது. இவர்களை தவிர   கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக இதில் அறிமுகமாகிறார். கருங்காப்பியம் படத்திற்கான ஒளிப்பதிவாளராக விக்கி, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷன்ல் ஆகிய நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்  மற்றும்  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  பிரபல நடிகைகள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


 






முன்னதாக டிகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா நடிப்பில்  உருவாகியுள்ள  படம் காட்டேரி. பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த கிருஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 25) அன்றே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்  இன்னும் வெளியாகாமல் உள்ளது.  படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருந்தது. ஆனால், திடீரென்று ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது . தமிழகமெங்கும் சுமார் 300 திரையரங்குகள் வரை ஒப்பந்தம் செய்து, படத்தினை தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்தனர் படக்குழு. ஆனால் படத்தைதிட்டமிட்டப்படி  வெளியிட முடியவில்லை.
கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று. படத்தை ஓடிடியில் வெளியிட்டால் அதற்குண்டான ஃபீல் கிடைக்காது என்பதால் , திரையரங்கத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்  படக்குழு.





முன்னதாக இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தயாரிப்பு நிர்வாகம் “கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத்தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ம் தேதி வெளிவர இருக்கும் 'காட்டேரி' திரைப்பட வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த கரோனா தாக்கம் குறைந்தவுடன் 'காட்டேரி' திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் திரையரங்கம் திறந்த உடனே ‘காட்டேரி’ மற்றும் ‘கருங்காப்பியம்; என  டபுள் தமாக்கா வெளியீட்டிற்காக காத்துருக்கிறார் இயக்குநர் டிகே.