வைகைப்புயல் என அறியப்பட்ட வடிவேலு இன்று மீம் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். எக்காலத்திற்கு ஏற்ற மாதிரியான நகைச்சுவையால் தலைமுறை கடந்து கோலோச்சி வருகிறார். இன்று பிறந்த நாள் காணும் காமெடி அரசனை பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ரசனையுடன் கூடிய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.வெற்றி கொடிக்கட்டு படத்தில் , துபாய் ரிட்டனாக தனது கிராமத்தில் வலம் வரும் வடிவேலு மற்றும் பார்த்திபன் காம்மோ செம ஹிட். அதிலும் “ஆமா துபாய்ல நீ இருந்த அட்ரஸ் சொல்லு முதல்ல ” என வடிவேலு கேட்க “ நம்பர் .6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயிண் ரோடு, துபாய் “ என பதிலளிப்பார் பார்த்திபன். இது இன்றளவும் மீம் கிரியேட்டர்களின் ஃபேவரெட் டெம்ப்ளேட். வெற்றி கொடிக்கட்டு படத்தை சேரன் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த காதாபாத்திரத்தை வெகுவாக ரசித்த இயக்குநர் சேரன், அதே பாணியில் வடிவேலுவை வாழ்த்தியுள்ளார் . அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் 'கிங்'.. ” என குறிப்பிட்டுள்ளார்.இந்த வாழ்த்திற்கு கீழே ரசிகர்கள் வடிவேலு மீமை தெறிக்கவிட்டு வருகின்றனர். பல தடைகளை கடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். “எனக்கு எண்டே கிடையாது “ என சமீபத்தில் அவர் கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் இணைய வைரலில் இடம்பிடித்தது. இந்நிலையில் வடிவேலு இன்று (செப்டம்பர் 12 ) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
வடிவேலு தனது ஆரம்ப நாட்களில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் பல படங்களில் மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அப்போதே, பலரும் வடிவேலுவின் வசன உச்சரிப்பையும், உடல்மொழி அசைவையும் ரசிக்கத் தொடங்கினர். அதன் பிறகு கலை மீது இவருக்கு இருத்த வெறியும் , கடின உழைப்பும் இன்று மீம் மன்னனாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர செய்துள்ளது.நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, சில படங்களில் வில்லனாக, ஹீரோவாக நடித்துள்ள வடிவேலு , காலம் மாறிப்போச்சு, வெற்றி கொடிகட்டு, தவசி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை பெற்றார். சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இது தவிர பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். அவர் இன்னும் பல அகவைகளை கடந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்!