நடிகைகள் பற்றி சர்ச்சையாக பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் வெங்கடாச்சலம், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் ஏ.வி.ராஜூ குற்றம் சாட்டியிருந்தார். 


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து வெங்கடசலத்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் குறையும் என்பதால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். 


ஆனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 


நடிகைகள் பற்றி சர்ச்சை பேச்சு 


இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஏ.வி.ராஜூ எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்தார். அப்போது கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர். கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம் என சொல்லி பிரபல நடிகையின் பெயரை குறிப்பிட்டார். நான் அங்கே என்ன நடக்கிறது என பார்க்கப் போனேன். கருணாஸ் தான் நடிகைகளை எல்லாம் ஏற்பாடு செய்தார். ஏ.வி.ராஜூவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நீக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அதனை குறிப்பிட்டு தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 


அந்த வகையில் இயக்குநரும்,நடிகரும் சேரன், ஏ.வி.ராஜூவை கடுமையாக கண்டித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ஏ.வி.ராஜூவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. விஷால், கார்த்தி உள்ளிட்ட  நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.