Karumegangal Kalaiginrana: சிறிய கண்கள், பெரிய மூக்குடன் கருப்பு நிறத்தில் இருந்ததால் என்னை யாரும் நடிக்க கூப்பிடவில்லை என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தங்கர் பச்சன் இயக்கி இருக்கும் கருமேகங்கள் களைகின்றன படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில், பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், தங்கர் பச்சன் உள்ளிட்ட பழக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய பாரதிராஜா தனது உடலமைப்பால் ஆரம்ப காலத்த்லி நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் கூறினார்.
பாரதிராஜா பேசுகையில், ”தற்போது படத்தின் டிரெய்லர், ஆடியோ ரிலீஸ் செய்வது ஒரு சடங்காக மாறிவிடுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்த விழாவுக்கு தங்கர்பச்சனுக்காக வந்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கர் பச்சன் எழுதிய சிறுகதையை நான் வெளியிட்டுள்ளேன். அப்பொழுது தான் அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என தெரியும்.
எனக்கு சின்ன வயதில் இருந்து நடிக்க வேண்டும் என்பதே ரொம்ப ஆசை. சினிமாவில் நடிப்பதற்காகவே நான் சென்னை வந்தேன். சின்னக்கண்ணு, பெரிய மூக்கு, கருப்பு கலர், சுருட்டை முடி என இருப்பதால் என்னை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. அதற்காக என்னை நடிக்க வேண்டாம். உதவி இயக்குநராக சேர்ந்து விடு என சிலர் அறிவுறுத்தினார்கள். அதனால் சினிமாவில் உதவி இயக்குநராக தொடங்கிய எனது பயணம் இதுவரை வந்துள்ளது.
நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட எனக்கு கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நீதியின் கேரக்டரை கொடுத்து என்னை அழகாக தங்கர்பச்சன் வடிவமைத்துள்ளார். அந்த காலத்தில் இருந்து நான் அதிகம் ரசித்தது பெண்களின் கண்களை தான். என்னுடைய படங்களில் பெண்களின் கண்களுக்காகவே ஷார்ட் வைத்து இருக்கேன். அதன் பிறகு, நான் அதிகமாக ரசித்தது கவுதம் மேனன் கண்களை தான்.
கவுதம் மேனனின் கண்கள் மட்டுமே பேசும். படத்தில் கவுதம் மேனனை அடிக்கும் காட்சி ஒன்று இருந்தது. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், கஷ்டப்பட்டு கவுதம் மேனனை அடித்து விட்டேன். அதேபோல், அதிதி பாலன் காலில் என்னை விழ வைத்தார்கள். பாரதிராஜா அதிதி காலில் விழுவதா என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால், நடிப்பு என்பதால் அதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அதிதி காலில் விழுந்தேன்” எனப் பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால் மக்களை கவர்ந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் என அவரின் பல படைப்புகள் இன்றளவும் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது. சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திய தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் சிகரம் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். VAU Media சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.