சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சிக்கு காலை 9:45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கும், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி காலை 8:25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கோவைக்கும் செல்வதற்கு  பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கவர்னர் முதலமைச்சர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில், விஐபி கேட் ஆறாம் எண் வழியாக வந்து விமானத்தில் ஏற இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இரு விமானங்களுக்கு இடையே, புறப்பாடு நேரங்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதால், சமாளித்து விடலாம் என்று நினைத்து இருந்தனர்.

 

கிண்டி ராஜ் பவனுக்கு தகவல் ..

 

கோவையிலிருந்து வழக்கமாக காலை 7:25 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும், காலை 8:25 க்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அந்த விமானத்தை இயக்கி வந்த விமானிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அந்த விமானி தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று கூறிவிட்டார். இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள், கவர்னர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை இயக்க, மாற்று விமானியை தேடினர். இதை அடுத்து கவர்னர் செல்ல இருந்த விமானம் தாமதமாக 9:30  மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். உடனடியாக கிண்டி ராஜ் பவனுக்கு தகவல் தெரிவித்து, கவர்னர் ரவியை தாமதமாக விமான நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள்.

 

45 நிமிடங்கள்  தாமதமாக...

 

இந்த நிலையில் மாற்று விமானியை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏற்பாடு செய்து, அவர் காலை 9:45 மணிக்கு விமானத்தில் வந்து ஏறினார். அதன்பின்பு கவர்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கிண்டி ராஜ்பவனில்  இருந்து புறப்பட்டு, காலை 10 மணிக்கு விமானத்தில் வந்து ஏறினார். இதை அடுத்து கவர்னர் பயணிக்கும் விமானம், ஒரு மணி நேரம், 42 நிமிடம் காலதாமதமாக  காலை 10: 07 மணிக்கு சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி செல்ல வேண்டிய விமானமும், 45 நிமிடங்கள் தாமதமாக திருச்சி புறப்பட்டு சென்றது.

 

விமான நிலைய ஓய்வு அறையில்

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து வழக்கமாக காலை 8:15 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9:45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் அந்த விமானம் கோழிக்கோட்டில் இருந்து, இன்று தாமதமாக சென்னை வந்தது. அதன் பின்பு விமானத்தை சுத்தப்படுத்தி, பயணிகளை ஏற்றுக் கொண்டு செல்ல இருந்ததால், விமானம் 45 நிமிடங்கள்  தாமதமாக, காலை 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றது. இதற்கிடையே விமான நிலையத்திற்கு வந்துவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், விமான நிலைய ஓய்வு அறையில், சிறிது நேரம் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார். அதன் பின்பு விமானத்தில் வந்து ஏறினார். சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், கவர்னர்  முதலமைச்சர் பயணித்த விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. அதிலும் கவர்னர் கோவை செல்ல இருந்த விமானத்தை, அதன் விமானி, தனக்கு உடல் நலம் சரியில்லாததால், விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்த சம்பவம்,சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் ஆகியோருடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது