இயக்குநர் பாலாவின் 56-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் பாலு மகேந்திராவின் சினிமா வாரிசான இவர், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் படங்கள் அனைத்தும் வழக்கத்தில் இருந்து மாறுபட்டவையாக இருக்கும். தேசிய விருதுகள் பெறுவது இவருக்கு கைவந்த கலை எனலாம். 4 தேசிய விருதுகள் பெற்றவர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியாக சினிமா எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வந்தவர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே தனது முதல் படத்தை எடுக்க முடிந்தது. பாலாவின் முதல் படம் சேது. நடிகர் விக்ரம் நடித்த இந்த படம் 1999-ஆம் ஆண்டு வெளிவந்தது.இவரது முதல் படத்திற்கே விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சுவாமிமலை சென்றிருந்தபோது அங்கு பார்த்த ஒரு அப்பா-மகளின்  குணாதிசயங்களை தழுவியே சேது படத்தில் கதாநாயகி மற்றும் அவரது தந்தை கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார். 


நடிகர்களின் வாழ்வை மாற்றிய பாலா !




பாலா படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பெரியாளாகி விடுவர் என்ற கூற்றும் தமிழ் திரைத்துறையில் நிலவுகிறது. அது உண்மையும் கூடத்தான். அதுவரை சரியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பாலாவின் சேது படத்திற்கு பிறகு தான் விக்ரம் ஒரு நல்ல நடிகராக, தனக்கென தனி இடத்தை பிடித்தார். சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் நந்தா.. அதுவும் பாலா இயக்கம் தான். அதேபோல 'அவன் இவன்' விஷால், 'நான் கடவுள்' ஆர்யா, 'பரதேசி' அதர்வா என  ஒவ்வொரு நடிகர்களின் திரை வாழ்க்கையையும் தரம் உயர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாலா. பாலா படத்தில் முக்கியமாக கதாநாயகி, கதாநாயகன் ஆகியோர் வழக்கத்தில் இருந்து மிகவும் மாறுபட்டவர்களாகவும், சாமானிய மக்களாகவும் இடம் பெறுவர். 


அதனால் தான் என்னவோ ரசிகர்கள் மத்தியில் பாலா படங்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஹிட்ஸ் பெரிதாக கொடுக்க முடியவில்லை என்றாலும்  தேசிய விருதுகளை அல்லும் நோக்கில் இருந்து பாலாவின் இயக்கம் மாறுபட்டதே இல்லை. இவரது இயக்கத்தில் மிகவும் பாராட்டப்பட்ட படம் பிதாமகன். சுடுகாட்டில் பிணம் எரிப்பவராக விக்ரம், போதை மருந்து விற்பவராக சங்கீதா, மற்றவரை ஏமாற்றி பிழைக்கும் சூர்யா என முக்கிய கதாபாத்திரங்களை மிகவும் வித்தியாசமான கோணங்களில் காட்டியிருப்பார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருது பெற்றார்.



#Suriya41 அப்டேட் :




பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் எப்பவுமே துணிச்சல் மிக்க ஒன்றாகவே காட்டப்படும். இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தனது படங்களான பரதேசி, நாச்சியார் ஆகியவற்றை  தயாரித்துள்ளார். மேலும் பிற இயக்குநர்களின் படங்களான மாயாவி,பிசாசு, சண்டிவீரன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.


இயக்குநர் பாலாவின் 56-வது பிறந்தநாளான இன்று,  தற்போது  சூர்யாவை வைத்து அவர் இயக்கும் #Surya 41 படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. பாலா மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.