தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர் இயக்குநர் அட்லி. தற்போது ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அட்லி இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார். என்னதான் அட்லி இயக்கிய படங்கள் வெற்றியடைந்தாலும் அவரின் படங்களில் முன்னதாக வெளிவந்த படங்களின் சாயல் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜாராணி, சத்ரியன் படத்தின் காப்பி தெறி,  அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பிதான் மெர்சல் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் நெட்டிசன்களால் பரவலாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் அட்லி அதில்  ” நான் எடுக்கக்கூடிய ஜானரை தாண்டி , கதைக்கருவை மக்களிடம் இருந்துதான் எடுக்கிறேன். ராஜா ராணி திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் , அது கணவன் - மனைவிக்கான உறவையும் அவர்களின் கடந்த காலத்தை பற்றியும் சொல்வது. இன்றைக்கு நிஜத்தில் அது இருக்கு. அதே மாதிரியான ஜானரில் ஒரு படம் இருக்கும் பொழுது அந்த படத்தை நாம் அப்படியான வெற்றிப்படமாக எடுக்கிறோமா இல்லையா என்பதுதான் விஷயம் .


 என்னுடைய படத்தை எப்பிக் படத்தோடு ஒப்பிட்டு சொல்லும் பொழுது அதனை நான் காம்ப்ளிமெண்டாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.  நாம எல்லாமே இன்ஸ்பிரேஷன்லதான் பண்ணுறோம் . சினிமாவை பார்த்து , இது போல ஒரு படம் செய்ய வேண்டும் , இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவை நோக்கி வருகிறோம் .  இன்ஸ்பிரேஷன் இல்லாமல் கிரியேட்டர் இருக்க முடியாது. உலகமே அப்படித்தான் இயங்குகிறது.அதனால் சர்ச்சைகளை நான் காம்ப்ளிமெண்டாகவே எடுத்துக்கொள்கிறேன். 7 ஸ்வரங்கள்தான் இருக்கிறது.


1000 வருடங்களுக்கு பிறகு ஒருவர் இசையமைத்தால் இளையராஜா சார், ரஹ்மான் சார், எம்.எஸ்.வி சார் இல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லாமே செய்துவிட்டார்கள். உலகத்தில் எல்லாவுமே ஏற்கனவே செய்த ஒன்றுதான் . புதுமை என்று எதுவுமே இல்லை. தெறி படம் நல்ல வளர்ப்பிற்கான உதாரணம். நிர்பயா சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் தெறி படத்தை எடுத்தேன். அந்த படத்தில் விஜய் சார் நடிப்பதால் அதற்கான நிறம் எப்படி அமைய வேண்டுமோ அப்படியாக எடுத்தேன்.மெர்சல் படத்தை தற்போது இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பல மெடிக்கல் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுத்தேன். இது எல்லாத்தையும் தாண்டி ராஜா ராணி மக்களுக்கு பிடித்ததா?, விநியோகஸ்தர்கள் பணம் சம்பாதித்தார்களா ? எனக்கு அடுத்த படம் கிடைத்ததா என்றால் இது எல்லாவுமே நடந்தது.


இதுல வருத்தப்பட எதுவுமே இல்லை. என்ன படைப்பை எடுத்துக்கிட்டாலும் அதன் ஆரம்ப புள்ளி இன்ஸ்பிரேஷன்தான். அது இல்லைனு சொல்லுறவங்க சொல்லட்டும் . எனக்கு அப்படித்தான். நான் எல்லாவற்றையும் எனது ஆசிரியர்களிடம் இருந்து  கற்றுக்கொள்கிறேன் அவ்வளவுதான் “ என பலநாள் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் அட்லி.