தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 42' திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு பறக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இலங்கையின் வனப்பகுதிகளில் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
வணங்கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :
இதை தவிர நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக நடித்து வந்தார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவின் ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வந்த 'வணங்கான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 40 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இருப்பினும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு இடையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதிதாக இணையும் 'அருவி' இயக்குனர் :
அந்த வகையில் படத்தின் ஹீரோ சூர்யாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு, படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி புதிய கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாலா. மேலும் புதிய தகவலாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குனர் பாலாவுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்ற உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017ம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் வெளியான 'அருவி' திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 'வணங்கான்' திரைப்படம் மூலம் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி சேரவுள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
'வணங்கான்' படத்தின் மாற்றப்பட்ட புதிய கதைக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை. வணங்கான் படம் குறித்த அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்ததால் இயக்குனர் மற்றும் நடிகர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் தான் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் அந்த வதந்தி உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து 'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய படங்களின் வெற்றியால் வணங்கானுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.