டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது. இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆசத்தியது. 


ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. 


இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர்.  இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது.  307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. 


நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் அதிரடி காட்ட மற்றொரு தொடக்க வீரர் டேவான் கான்வே நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 


25 பந்துகளில் (ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி) 22 ரன்கள் குவித்த பின் ஆலன், ஷர்துல் தாக்கூர் வீசிய 8 வது ஓவரில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தார். தொடர்ந்து டேவிட் கான்வே 42 பந்துகளில் 24 ரன்களுடனும், அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களுடனும் உம்ரான் மாலிக் வேகத்தில் வெளியேறினர். 


கேப்டன் வில்லியம்சன் களமிறங்கியது முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்த, அவருடன் ஜோடி சேர்ந்த டாம் லதாம் நியூசிலாந்து அணி வெற்றிக்கு நங்கூரம் அமைத்தனர். 




இருவரும் இந்திய அணியினரின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர். 


35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 187 - 3 என்ற வழுவான நிலையில் உள்ளது. வில்லியம்சன் 68 ரன்களுடனும், லாதம் 55 ரன்களுடனும் களத்தில் நிலையாக இருந்தது. 12 ஓவர்களில் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் தாக்குர் வீசிய 40 ஓவரில் டாம் லாதம்  ஒரு சிக்ஸர், 4 ஃபோர் பறக்கவிட்டு சதம் அடித்து அசத்தினார். 


நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களிலேயே 307 ரன்களை துரத்தி எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களுடனும், டாம் லதாம் 145 ரன்களுடனும் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.