கான் விழாவில் விருது வென்ற இந்தியப் படங்கள்


நடந்து முடிந்த சர்வதேச கான் திரைப்பட விழாவில் இந்தியாவைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய All We Imagine As Light திரைப்படம் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றது. சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த அனசுயா செங்குப்தா வென்றார். மேலும் சிறந்த குறும்படத்திற்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த சிதாநந்தா எஸ் நாயக் வென்றார்.


கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா சார்பாக ஒரு படம் கூட கான் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகாத நிலையில், பாயல் கபாடியாவின் திரைப்படம் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்று சாதனை படைத்துள்ளது. விருது வென்ற அனைவருக்கும்  இந்திய அரசு மற்றும் இந்தியத் திரையுலகினர் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் விருது வென்ற படங்களுக்கு இந்தியா எந்த விதத்திலும் ஆதரவு தராமல் பெருமைப்பட்டுக் கொள்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஒருவர் கூட படம் பார்க்க மாட்டார்கள்


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப் இந்திய திரைப்படத் துறை மீது பல்வேறு விமர்சனங்களை அடுக்கினார். இதில் அவர் “ சர்வதேச விழாக்களில் இந்த ஆண்டு விருது வென்ற எந்தப் படங்களையும் இந்தியா ஆதரிக்கவில்லை. ஆனால் அதன் மூலம் வரும் பெருமைகளை மட்டும் அது சொந்தம் கொண்டாடும். இந்தியத் திரைத்துறை அல்லது இந்திய அரசாகட்டும் விருது வென்ற படங்கள் இங்கு திரையரங்கில் வெளியாவதற்கு எந்தவிதமான ஆதரவும் கொடுப்பது இல்லை. அப்படியே இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அதை யாரும் சென்று பார்க்கக்கூட மாட்டார்கள். இந்த ஆண்டு விருது வென்ற படங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. எந்தவிதமான ஆதரவும் தராமல் விருது வென்றதும் அது தேசத்தின் வெற்றியெனக் கொண்டாடுகிறது இந்தியா.


கிராண்ட் ப்ரிக்ஸ் விருது வென்ற பாயல் கபாடியா, முன்னாள் திரைப்படக் கல்லூரி மாணவர். திரைப்படக் கல்லூரியில் அன்றைய தலைவராக இருந்த கஜேந்திர செளகன் தன்னுடைய மாணவி விருது வென்றது குறித்து பெருமையாக பேசினார். ஆனால் அவரை எதிர்த்து போராடியதற்காக பாயல் கபாடியா உட்பட பல திரைப்படக் கல்லூரி மாணவர்களின் மீது வழக்கு போட்டு அவர்களை சிறைக்குள் அடைத்தார் கஜேந்தர் செளகன். 


இன்னொரு தரப்பினர் திரைப்படங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கான் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த மாதிரியான நிகழ்வுகளை கேள்விப்படும்போது எல்லாம் நான் ரொம்ப எரிச்சலடைகிறேன்” என்று அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.