நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிமாரா ஓடை அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் நேரங்களில் இந்த ஓடையிலும் அருகில் இருக்கும் குத்தரபாஞ்சான் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படும். அந்த நேரங்களில் அங்கு மக்கள் சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்படும். இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்த ஓடையில் தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் குளித்து மகிழும் அளவிற்கு ஓடையில் தண்ணீர் செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே இங்கு குளிப்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.


இந்த  நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறை தினம் என்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு சென்ற திசையன் விளையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் என்பவரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் அவர் கையில் அணிந்திருந்த 1.5 சவரன் தங்க மோதிரம் தவறி கீழே விழுந்துள்ளது, உடனே அவர் அதனை ஓடையின் பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்து உள்ளார். நீண்ட  நேரமாக தேடியும் அவருக்கு மோதிரம் கிடைக்காத நிலையில் சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார். 




இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு பிறகு எப்படியாவது மோதிரத்தை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்  கடலில் சிப்பி எடுக்கும் வீரர்கள் நான்கு பேரை தன்னுடன் அழைத்து  வந்து மோதிரம் விழுந்த இடத்தை காண்பித்தார். அவர்கள் அங்கு நீரில் மூழ்கி  பல இடங்களில் தேடிப் பார்த்தனர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு ஓடையில் ஓர் இடத்தில் மோதிரம் கிடந்துள்ளது. இதனை கண்டுபிடித்த சிப்பி எடுக்கும் வீரர்கள் மோதிரத்தை  கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கையில் அணிவித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நடேஷ் அரவிந்த் வீரர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இரண்டு நாட்கள் கழித்து நம்பிக்கையுடன் மோதிரம் விழுந்த இடத்தில் தேடி இரண்டு மணி நேர தேடலுக்குப்பின் கண்டுபிடித்த நிகழ்வு நெல்லையில் சுவாரஸ்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.