அனுராக் கஷ்யப்


பாலிவுட் சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களின் நிபந்தனைக்கு கட்டுப்படாமல் தனிச்சு செயல்பட்டு வருபவர்களில் அனுராக் கஷ்யப் முதன்மையானவர். ஸ்டார்களின்  வாரிசுகள் மட்டுமே அறிமுகமாகி வழக்கொழிந்து போன காதல் கதைகளை மட்டுமே ஊக்கப் படுத்தி வருகின்றன பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே இந்திப் படங்களுக்கு இருந்த வரலாற்று முக்கியத்துவத்தை பேசியும் அவற்றின் தொடர்ச்சியாக தங்களை கருதிக் கொள்ளும் படியான படங்களை தைரியமாக எடுத்து வருகிறார்கள். அனுராக் கஷ்யப் எடுத்த கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் , உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலிவுட் சினிமாத் துறையை தொடர்ச்சியாக தைரியமாக விமர்சிக்கக் கூடியவரும் அவர்தான். அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின் சினிமாவில் தேவையில்லாத வீண் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு பர்கர் வாங்க மூன்று மணிநேரம் பயணம்


இந்த நேர்காணலில் அனுராக் கஷ்யப் தெரிவித்ததாவது “ ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமாவில் தேவையில்லாத செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த பணத்தை அந்த படத்திற்காக யாரும் செலவு செய்வதில்லை. முதலில் ஒரு படம் எடுக்கும் போது நாம் ஒரு கதையை படமாக உருவாக்க வேலை செய்கிறோம்  சுற்றுலாவோ பிக்னிக் கொண்டாட செல்லவில்லை என்கிற உண்மையை இவர்கள் எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் ஒரு காட்டில் படம்பிடித்துக் கொண்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு நடிகருக்கு பிடித்த ஃபைவ் ஸ்டார் உணவு விடுதியில் கிடைக்கும் பர்கர் வாங்குவதற்காக மட்டும் ஒரு  கார் மூன்று மணி நேரம் தூரம் செல்லும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக நான் சேக்ரட் கேம்ஸ் இயக்கியபோது ஒரு படத்தின் செட்டில் அத்தனை கேரவான்களை நான் பார்த்தது இல்லை. ஓடிடி தளங்களின் வருகை நிறைய விஷயங்களை கெடுத்துவிட்டது. ஒரு படத்தில் வேலை செய்யும் தொழில் நுட்பக் கலைஞர்கள் கவனம் பெறுகிறார்கள் என்கிற உண்மையை நான் மறுக்கவில்லை. ஆனால்  நடிகர்கள் தங்களது தேவைகளை பலமடங்கு உயர்த்தி விட்டார்கள். இந்த நிலையில் இருந்து மீண்டும் நாம் சிக்கமான முறைகளை பின்பற்றுவது ரொம்ப கஷ்டம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்


கதை முக்கியம் இல்லை பாக்ச் ஆஃபிஸ் தான் முக்கியம் 


இன்று சமூக வலைதளம் தான் அனைவரது மனநிலையையும் கெடுப்பதில் முக்கிய குற்றவாளி. இன்று ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைப் பற்றிதான் கவலை. நான் ஒரு நடிகரிடம் கதை சொல்கிறேன் என்றால் அவருக்கு கதை பிடித்திருந்தாலும் அவர் அந்தப் படத்தில் நடிக்க சம்மதிப்பதில்லை. அவர்கள் அந்த படம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதை தான் முதலில் யோசிக்கிறார்கள். புதுவிதமான கதைகளில் நடிப்பதற்கு யாரும் தயாராக இல்லை’ என்று அனுராக் கஷ்யப் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்