மக்களவை தேர்தல் முடிவுகள்
ஏப்ரல் 19 தமிழ்நாட்டில் தொடங்கி கடந்த ஒன்றரை மாத காலம் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்துமுடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதுல் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
5 லட்சம் வாக்குகள் பெற்ற விசிக
இதில் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைக் கட்சி மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் 5 லட்சம் வாக்குகள் பெற்று ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 4.77 லட்சம் வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு மாநிலக் கட்சியாக அந்தஸ்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் பெரும்பலான நிபந்தனைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பூர்த்தி செய்துள்ளதால் திமுக, அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வரிசையில், விசிகவும் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு.” என தொல் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்
தொல் திருமா வளவனை சந்தித்த தம்பி ராமையா
சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனின் வெற்றியை பாராட்டும் விதமாக நடிகர் தம்பி ராமையா விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரை நேரில் சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்துடன் தனது வீட்டு நிகழ்வு ஒன்றுக்கு தொல் திருமாவளவன் வருகை தரும் படி அவருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளார் தம்பி ராமையா.