தஞ்சாவூர்: தஞ்சை அருகே சமுத்திரம் ஏரியில் இருந்த ஆகாயத் தாமரைக் கொடிகள் மற்றும் சுற்றி வளர்ந்திருந்த செடி, கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது சமுத்திரம் ஏரி பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


சுற்றுலாவின் முக்கிய இடமாக விளங்கும் தஞ்சாவூர்


சுற்றுலா என்றாலே அனைவரின் நினைவுக்கும் சட்டென்று வருவதும் தஞ்சாவூர்தான். கோயில்கள், அரண்மனை, பசுமைப்படர்ந்த நெல் வயல்கள் என தஞ்சையின் பெருமையே உலகறிந்த ஒன்றுதான். சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சையில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருந்தாலும் மற்ற ஊர்களில் உள்ளது போல தஞ்சை மக்கள் பொழுது போக்க தீம் பார்க்குகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மால்கள் என்று இல்லாதது ஒன்றுதான் குறை. ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையிலும், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக சமுத்திரம் ஏரி விளங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




287 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமுத்திரம் ஏரி


தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி தஞ்சையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதனை பார்க்கும் போது தஞ்சை நகரில் தொடங்கி மாரியம்மன்கோவில் வரை பரந்து விரிந்து இருந்தது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி


இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சமுத்திரம் ஏரியை புனரமைத்துள்ளனர். இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று‌ வந்ததாகவும் கூறப்படுகிறது.


ரூ.9 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள்


இப்படி பெருமை மிகுந்த சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் சமுத்திரம் ஏரியின் நிலை அவலமாகிக் கொண்டே இருந்தது. இதையடுத்து இந்த ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இது‌ தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் தங்கி குஞ்சு பொரிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் உள்ளது.


சிறுவர் விளையாட்டு பூங்காவுடன் சுற்றுலாதலமாக அமைப்பு


மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரியும் விடப்பட உள்ளது. மேலும் பொழுது போக்கு மீன்பிடி பயிற்சித் தளமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.


பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மாலை நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் இங்கு வந்து ரிலாக்ஸ் ஆகி செல்கின்றனர். மாலை 6 மணி அளவில் சமுத்திர ஏரி திறக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் மூடப்படுகிறது. பொதுமக்கள் அவர்களது குடும்பத்தினருடன் வந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சமுத்திர ஏரியின் நுழைவாயிலில் தள்ளு வண்டிகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர்.


ஆகாயத் தாமரை மற்றும் செடி, கொடிகள் அகற்றம்


தஞ்சை பகுதி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதற்கிடையில் இந்த சமுத்திரம் ஏரியில் படர்ந்து கிடந்த ஆகாயத் தாமரை மற்றும் செடி, கொடிகள், கரைகளை சுற்றி வளர்ந்திருந்த செடிகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சமுத்திரம் ஏரி பளிச்சென்று உள்ளது. அதிகாரிகளின் இந்த தூய்மைப்பணியை மக்கள் பாராட்டியுள்ளனர்.