கடவுளை காப்பாற்றவா உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என பாஜகவை நடிகர் பொன்வண்ணன் சரமாரியாக விமர்சித்துள்ளார். 


சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த மக்களவை தேர்தலின்போது பிரியங்கா காந்தி பாம்பு பிடிக்கும் மக்களிடம் பேசினார். அப்போது அவர்கள் வைத்திருந்த பாம்பை கையில் தைரியமாக எடுத்தார். பின்னர் கைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே பாம்பு பிடித்த அந்த கையை தனது முகத்தில் வைத்தார். அந்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் அரசியலை தாண்டி ஒரு மனிதாபிமானத்தோடு மக்களை அணுக வேண்டும் என்றால் பாம்பை தொட்டால் கூட கையை முகத்தில் கூச்சம் இல்லாமல் வைக்கும் மனநிலை இருக்க வேண்டும். ஆனால் இங்கே மாற்றுத்திறனாளி ஒருவர் மேடையில் ஏறி வணக்கம் வைத்தாலும் பாஜகவில் கண்டுகொள்வதில்லை. 


மேலும் இந்தியாவுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனை பார்த்தால் பல கலாச்சாரங்கள், வாழ்க்கை சூழல்கள் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இதையே அரசியலுக்காக தனியாக எடுத்ததால் இங்கு பல பிரிவுகள் தானாகவே நடந்து கொண்டிருக்கிறது. எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என நினைக்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கும் என தோன்றுகிறது. 


இந்தியாவின் பரப்பளவை பொறுத்தமட்டில் நெருக்கமாக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களிடம் அன்பை விதைக்க வேண்டும். நான் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வந்தால் குறைந்தது 10 ஆயிரம் பேரையாவது பார்த்திருப்பேன். ஆனால் இங்கு எதில் பார்த்தாலும் எதை சொல்கிறீர்கள்?. இன்றைக்கு கஷ்டப்படுபவர்களை பற்றி பேச ஒருவரும் இல்லையா? 


சாமி இருக்குது, இல்லை. எப்போது பார்த்தாலும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சாமிக்கு தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதா?. எங்கள் வீட்டை எடுத்துக் கொண்டால் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி எங்கு  பார்த்தாலும் கடவுள் நம்பிக்கை உள்ளது. என்னை சுற்றிலும் சாமி இருக்குது. ஆனால் அதை காப்பாற்ற நீங்கள் ஏன் போராடுகிறீகர்கள்? அதுக்காகவா ஆட்சி கட்டிலில் உங்களை அமர வைத்தோம். 


நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். முதலமைச்சர் என்பவர் எண்ணங்கள், செயல்களை எல்லாம் வெளிப்படுத்துபவர். மக்களுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டும் என கனவு காண்பவர். நாம் ஒரு முதல்வரை எல்லாம் பாராட்டுவதை விட, எல்லாரும் தங்களை தாங்களே முதல்வராக நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அந்த எண்ணங்களை அனைவரது மனதிலும் பதிய வைத்து விட்டார். இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகம் செய்தாலும், எதற்கும் தன் பெயரை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துக் கொள்ளவில்லை என அந்நிகழ்ச்சியில் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.