நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி திரை பயணத்தில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' மற்றும் கார்த்தி அறிமுகமான 'பருத்திவீரன்' என அண்ணன் தம்பி இருவருக்குமே மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அமீர் அப்படங்களுக்கு பிறகு தன்னுடைய பெயரையும் திரைத்துறையில் நிலைநிறுத்திக் கொண்டார்.


 



இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்தியை, 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்த அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  


அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அமீர் வரவேற்கப்படாதற்கு நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் இருக்கும் பிரச்சினை தான் காரணம் என கூறி  இருந்தார். உண்மையில் கார்த்தி இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரிடம் அமீர் கத்தி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.


அமீரின் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து இருந்தார் பருத்திவீரன் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா. தன்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தால் 'பருத்திவீரன்' படத்தின் பர்ஸ்ட் காபியை எடுத்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். படத்தை எடுக்க  2.70 லட்சம் பட்ஜெட் என சொல்லி 4 கோடி வரை செலவு வைத்தார். மேலும் படத்தில் பயன்படுத்தப்படாத பன்றிகளை வாங்கியதற்கு செலவானது என சொல்லி கணக்கில் காட்டினார்.


 




தன்னை போலவே பலரிடமும் அமீர் பணம் வாங்கியுள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகளை அமீர் மீது வைத்தார் ஞானவேல் ராஜா. இப்படி பல வகையில் தன்னிடம் இருந்து பணம் சம்பாதித்துவிட்டு அதை பெரிய பிரச்சினையாக்க வேண்டாம் என நினைத்த சிவகுமார் சார் குடும்பத்தையும் இப்போது குற்றம்சாட்டி பேசுகிறார். இவர் என்னவோ சூர்யாவுக்கு கார்த்திக்கும் வாழ்க்கை கொடுத்தது போல பேசுகிறார். உண்மையில் அவர்கள் தான் இவருக்கு வாழ்க்கை கொடுத்தனர். அமீருக்கு அவர் தான் பிரச்சினை. வெளியில் இருந்து ஏதாவது பிரச்சினை என்றால் தீர்வு சொல்லலாம் ஆனால் இவர் விஷயத்தில் அவரே பிரச்சினையாக இருக்கும் போது எப்படி தீர்வு சொல்ல முடியும் என பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் ஞானவேல் ராஜா. அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.


ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பது போல "நன்றி மறந்து முதுகில் குத்தினாலும் மீண்டும் உன் முன்னாடி திமிரோடு நிற்பேன். நடிகர்களின் பின்னால் உன்னை போல போய் ஒளிந்து கொள்ள மாட்டேன்" என பதிலடி கொடுத்துள்ளார் அமீர்.


அமீர் - ஞானவேல் ராஜா இடையே நடக்கும் இந்த கருத்துவேறுபாடு சோசியல் மீடியாவில் பேசுபொருளக மாறியுள்ளது.