அஜித்தை வைத்து டார்க் ஹியூமர் ஜானரில் ஜெயிலர் போன்ற ஒரு படம் எடுக்க விரும்பியதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்தது. கடந்த பத்தாம் தேதி ரிலீசான இந்த படமும் முதல் நாளில் ரூ.2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.21 கோடி என ஒரே வாரத்தில் ரூ.45 கோடியை வசூலித்தது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் இருக்கின்றனர். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. வழக்கமான பாணியில் இல்லாமல் 1975ம் ஆண்டுகளில் நடக்கும் பீரியட் படமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததாகவே கூறப்படுகிறது. இதனால் வசூலில் ரூ.50 கோடியை நெருங்கியது. இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அதன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த படத்திற்காக கார்த்திக் சுப்பராஜ் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில்,  ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டாட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளன. 

 

ஜிகர்தண்டா நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனியார் ஊடகத்தின் நேர்க்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் அஜித்துக்கு ரெடியாக இருக்கும் ஸ்கிரிப்ட் குறித்து பகிர்ந்துள்ளார். அஜித்தை வைத்து எந்த மாதிரியான படம் எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ், ”அஜித்துக்கு டார்க் ஹியூமர் படம் தான் செட் ஆகும்னு யோசித்தேன்.. அவருக்கு ஜெயிலர் போன்ற படம் நல்லா இருக்கும்” என்றார்.

 





 

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பிரதான தேர்வுகளில் இருக்கும் ஒரு இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ், தனது முதல் படமான பீட்சாவில் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதன்பிறகு எடுக்கப்பட்ட ஜிகர்தண்டா முதல் பாகம் மாஸ் வெற்றியை பெற்றது. பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட படத்தை எடுத்திருந்தார். இவரது இயக்கத்தில் வெளிவந்த மகான் படத்தில் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றன.