சமீப காலமாகவே, டீப் ஃபேக் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


"தேவைகளை கருதி ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்"


இந்த நிலையில், மெய்நிகர் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டீப் பேக் விவகாரம் பெரும் கவலை அளிப்பதாகவும் சமூகத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்களின் தேவைகளை கருதி ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, "ஏஐ தொழில்நுட்பம், மக்களை சென்றடைய வேண்டும். அது சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றார்.


இஸ்ரேல் போர் குறித்து பேசிய அவர், "பிராந்திய மோதலாக போர் மாறாமல் இருப்பதை பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தியாவின் தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி20இல் உறுப்பினரானது இந்தியாவிற்கு பெருமைக்குரிய விஷயம். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஜி20 உடன் இணைந்தனர். நாங்கள் அதை திருவிழாவாக கொண்டாடினோம். சவால்களை எதிர்கொள்ளும் உலகில், நம்மிடையே இருக்கும் பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைத்து, ஒருவரையொருவர் இணைக்கிறது" என்றார்.


"பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைக்கிறது"


தொடர்ந்து பேசிய அவர், "புதுமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வலுவாக ஆதரிக்கும் அதே வேளையில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதை ஜி20 அமைப்பு வலியுறுத்துகிறது. பலதரப்புவாதத்தின் மீதான நமது நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது.


பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் மற்றும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டுதலை நாங்கள் ஒன்றாக வழங்கியுள்ளோம். இதன் மூலம், இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பு, மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அவநம்பிக்கை மற்றும் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைத்து, ஒருவரையொருவர் இணைக்கிறது. 


இந்த ஒரு வருடத்தில், சர்ச்சைகளுக்குப் பதிலாக, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளோம்" என்றார்.


தொடர் சர்ச்சை கிளப்பும் டீப் ஃபேக் வீடியோக்கள்: 


இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து ஆபாசமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.


இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது போன்று நடைபெறமால் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. 


இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டீப் பேக் வீடியோக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த பிரச்னை நின்றபாடில்லை.