Ameer On Periyar and Vadakkupatti Ramasamy :பெரியாரை விமர்சித்து நடிகர் சந்தானம் படத்தின் வசனம் இருந்ததாக கூறி இயக்குநர் அமீர் அவரை கடுமையாக சாடியுள்ளார். 


டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் 2வது முறையாக இணைந்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. 


இதனிடையே கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் தாடியுடன் சந்தானம் இருக்கும் கெட்டப்  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் அதில், “சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ?” என்ற வசனம் வைக்கப்பட்டிருந்தது. இதில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தந்தை பெரியாரை விமர்சித்ததாக பலரும் சந்தானத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பொங்கல் அன்று மீண்டும் அதே வசனத்தை பேசி சந்தானம் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் சந்தானத்தின் செயலுக்கு இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 


அதில், “பெரியாரை விமர்சிப்பதில் கூட நான் அடிக்கடி ஒன்று சொல்வேன். சமீபத்தில் கூட “வடக்குப்பட்டி ராமசாமி” படத்துல “நான் அந்த ராமசாமி இல்ல” என்ற வசனம் வைக்கப்பட்டிருந்தது. நீ ஒருநாளும் அந்த ராமசாமி ஆக முடியாது. அவ்வளவு தகுதி எல்லாம் உனக்கு இல்ல.அந்த ராமசாமி ஆகும் அளவுக்கு பெரிய ஆள் நான் இல்லை என்பதை நீ உணர வேண்டும். அந்த ராமசாமி இல்லைன்னு நீ ஏளமனமாக சொல்றீயே, இப்ப நான் சொல்றேன். அந்த ராமசாமி ஆக நீ பல்லாயிரக்கணக்கான வருஷம் தவம் கிடக்க வேண்டும்.


ஏனென்றால் அந்த ராமசாமி அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நீ அந்த ராமசாமி ஆகுவதற்கு உனக்கு தகுதியில்லை என நான் நினைக்கிறேன். இதில் ஒரு விஷயம் நீங்கள் கவனிக்க வேண்டும். அவர் பெயர் நிஜமாகவே ராமசாமி தான். ஆனால் அவரின் செயல்பாட்டின் காரணமாக பெரியார், ஈவெரா, தந்தை என்று அழைத்தோம். இதில் எந்த பெயரிலும் கடவுள் நம்பிக்கை என்பதே இல்லை. அன்பு, மரியாதை என்பது தான் மிகுதியாக இருக்கும். ஆனால் நாங்கள் இதையெல்லாம் சொல்லாமாட்டோம் என்று நீங்கள் தான் ராமசாமி என்றும், கடவுள் என்றும், சாமி என்று அழைக்கிறீர்கள். நாங்களா சொல்கின்றோம்?”