அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 


ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், பஜனை பாடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது. மேலும் மக்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமர் கோயில் திறப்பை கொண்டாடினர். இதனிடையே ஜனவரி 23 ஆம் தேதி முதல் இந்த கோயிலில் பொதுமக்கள் வழிபாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 


ஆனால் 22 ஆம் தேதி நள்ளிரவு முதலே பக்தர்கள் ராமர் கோயில் வாயிலில் குவியத் தொடங்கினர்.அங்கிருந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு சாமி தரிசனம் செய்ய ஓடிய நிகழ்வுகளும், இதில் சில பக்தர்கள் காயமடைந்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் மக்கள் தலைகளாக காணப்படுவதால் அந்நகரமே எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. 


இதனிடையே அயோத்தி ராமர் கோயிலில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் காலை 7 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் வருவதால் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநில பக்தர்களும் வருகை தருவதால் அவர்களுக்கு உதவ சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. 


பக்தர்கள் வசதிக்காக அயோத்தியில் சாமி தரிசனம் செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் ராமரை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு அது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அயோத்தி எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் முன்பே தடுத்து நிறுத்தப்படுகிறது.


பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவசரகால வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வருவதை முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுத்தினார்.