தமிழ் திரையுலகின் தரமான மற்றும் குடும்ப பாங்கான இயக்குனர்களின் பட்டியல்களில் எப்போதும் ஏ.எல்.விஜய்க்கு தனி இடம் உண்டு. அவருக்கு இன்று 45வது பிறந்தநாள் ஆகும். கிரீடம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இயக்கிய திரைப்படங்களில் மதராசப்பட்டினம் என்றுமே ஒரு மாஸ்டர்பீஸ் ஆகும்.


மதராசப்பட்டினம்:


கோலிவுட்டின் டைட்டானிக் என்று கொண்டாடப்படும் அளவிற்கு ஒரு அழகான காதல் கதையை திரைப்படமாக எடுத்திருப்பார்கள். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் வசித்த ஒரு சலவைத் தொழிலாளிக்கும், இங்கிலாந்து பெண்ணுக்கும் இடையேயான காதலை கவித்துவமாக ஏ.எல்.விஜய் காட்டியிருப்பார். இந்த படத்தின் பலமே படத்தின் நாயகியான எமி ஜாக்சனே ஆவார்.


எமி ஜாக்சன் எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்பது குறித்த ஒரு முறை வார இதழ் ஒன்றிற்கு ஏ.எல். விஜய் கூறியிருப்பார். அவர் கூறியிருந்ததாவது, “ ஹீரோயின்தான் படத்துல முக்கியம். அதனால 180 வெளிநாட்டுக்காரங்களை ஆடிஷன் பண்ணேன். என்னோட முதல் அமெரிக்க நடிகை வனசா ஹட்ஜன்ஸ். ஆனா அவங்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாங்க. படத்தோட பாதி பட்ஜெட் அது. அப்போ என்னோட அசிஸ்டென்தான் மிஸ் டீன் வேர்ல்ட் டைட்டிலை ஜெயிச்ச பொண்ணுனு எமி போட்டோ காட்டுனாங்க. பாத்த உடனே ரொம்ப பிடிச்சுருச்சு. லண்டன்ல இருக்குற ஏஜெண்ட்கிட்ட இந்த பொண்ணைத் தேடுங்க. நான் லண்டன் வர்றப்ப ஆடிஷன் வைக்கனும்னு சொல்லிட்டேன்.


எமி ஜாக்சன் படத்திற்குள் வந்தது எப்படி?


அவரும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிட்டேன் சார். அந்த பொண்ணு வந்துடும்னு சொன்னார். அதை நம்பி தயாரிப்பாளர் அகோரம் சார்கிட்டயும், ஆர்யாகிட்டயும் இந்த பொண்ணுதான் ஹீரோயின்னு சொல்லிட்டேன். சந்தோஷமா லண்டன் போன எனக்கு பெரிய ஷாக். எமி வரவே இல்ல. ஆடிஷனுக்கு 180 பேர் வந்துருக்காங்க. அந்த பொண்ணு வரலனு சொன்னதும் அவங்க எல்லாரையும் சத்தம் போட்டேன்.


நானும் கோபத்தோட வேற வழியில்லாம இவங்க எல்லாரையும் ஆடிஷன் பண்ணிட்டு இருந்தேன். யாரையும் பிடிக்கல. 3வது நாள் ஆடிஷன் முடியப்போற நேரத்துல வரிசையில ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தாங்க. பாத்த அது எமிஜாக்சன். இப்படி ஆடிஷன் நடக்குதுனு அவங்களே கேள்விபட்டு வந்துருக்காங்க. அவங்ககிட்ட நேரா போயிட்டு நீங்கதான் ஹீரோயின்னு சொல்லிட்டேன். விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அவங்க லண்டன் கிடையாது. லிவர்பூல்னு தெரிஞ்சது. ஆடிஷனுக்காக லண்டன் வந்துருக்கேனு சொன்னாங்க. ( லிவர்பூல் நகரத்தில் இருந்து லண்டன் 212 மைல், அதாவது 4.30 மணி நேர சாலை வழி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது)


எமிக்காக காட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து:


அடுத்த நாள் எமியோட அப்பாவை வர வச்சு பேசுனோம். அவங்களுக்கு இந்திய படம்னாலே பாலிவுட்தான் தெரியும். அதுனால இந்த படத்தையும் பாலிவுட் படம்னே சொல்லி ஒத்துக்க வச்சோம். அப்போ எமி ஜாக்சனுக்கு 16 வயசுதான். அதுனால நிறைய டாக்குமெண்ட்ல எல்லாம் கையெழுத்து போட வேண்டியிருந்தது. எனக்கு எமி கிடைச்சாபோதும்னு கேட்குற இடத்துல எல்லாம் கண்ணை மூடிட்டு கையெழுத்து போட்டேன். எப்படியாவது அவங்களை நடிக்க வச்சிடலாம்னு நம்பிக்கை இருந்தது. எமிதான் படத்துக்கு பெரிய ப்ளஸ். ரொம்ப ப்ரெஷ்ஷா இருந்தாங்க. அதேசமயம் ரொம்ப டெடிகேஷன்.”


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


2010ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், ஏ.எல். விஜய்க்கு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது. படமும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


மேலும் படிக்க: Pokkiri Re-release Trailer : ”ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா” 4k டிஜிட்டல் தரத்தில் வெளியானது 'போக்கிரி' ரீ ரிலீஸ் டிரைலர்


மேலும் படிக்க: Ajith Kumar : திருப்பதி கோவிலில் அஜித் சுவாமி தரிசனம்.. ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..