NZ vs PNG, T20 Worldcup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்காமல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


நியூசிலாந்து அணி பந்துவீச்சு:


ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பை 2024 இல் நியூசிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் குரூப் சுற்றில் தனது கடைசி லீக் போட்டியில், பப்புவா நியூ கினியாவை (PNG) எதிர்கொண்டது. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து அணி பந்துவீசிய நிலையில், லாக்கி பெர்குசனின் ஒரு புதிய வரலாற்று சாதனயை படைத்தார்.


பெருகுசன் மிரட்டலான பந்துவீச்சு:


வலது கை வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் தான் வீசிய 24 பந்துகளில் ஒரு ரன்னை கூட எதிரணிக்கு விட்டு கொடுக்கவில்லை. ஆடவர் T20I வரலாற்றில் இத்தகைய நிகழ்வு அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். 33 வயதான அவர், தனது லைன் மற்றும் லென்த் மூலம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே நேரத்தில் மெய்டன் ஓவர்களை ஒன்றன் பின் ஒன்றாக வீசினார் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்தார். இதனால்  PNG அணி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிம் சவுத்தி, இஷ் சோதி மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தனது கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி, தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் சான்ட்னர் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.






முதல் பந்திலேயே விக்கெட்:


பெர்குசன் தனது முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டைப் பெற்றார். அதன்படி PNG கேப்டன் அசாத் வாலாடாவை 6 (16) ரன்களுக்கு வெளியேற்றினார். பவர்பிளேக்குப் பிறகு 12வது ஓவரில் தாக்குதலுக்குத் திரும்பினார். அப்போது  சார்லஸ் அமினியை 17 (25) ரன்களுக்கு வெளியேற்றினார். அவரது மூன்றாவது ஓவரான இன்னிங்ஸின் 14வது ஓவரிலும் ஒரு விக்கெட்-மெய்டனாக சாட் சோப்பரை 6 ப்ந்துகளில் 1 ரன் எடுத்து இருந்தபோது வெளியேற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்று சாதனையை படைத்த பெர்குசனிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.