இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர் என பன்முகத் திறைமையாளராக விளங்கிய மனோபாலா பிறந்தநாள் இன்று. எந்தக் காலமானாலும் அதில் தன்னை அழகாய் பொருத்தி கொள்ள கூடியவர்.


உதாரணமாக வந்தவர் :


ஈடு இணையில்லா மனோபாலா இன்று நமக்கு மத்தியில் இல்லை என்றாலும் அவர் பகிர்ந்த மனதை கணக்கும் நிகழ்வுகள் குறித்த ஒரு பதிவு.  நல்ல காரியத்திற்கு போகிறோமோ இல்லையோ ஒரு துக்க காரியத்திற்கு முதலில் போய் நிற்க வேண்டும் என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்கியவர் மனோபாலா. அப்படி திரையுலகைச் சார்ந்தவர்கள் பலரின் இழப்பு குறித்தும் அது அவருக்கு ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் நேர்க்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.


 



 


பாக்கியவாவன் மயில்சாமி :


நடிகர் மயில்சாமி குறித்து பேசுகையில் அவனை போல இறங்கி வேலை செய்ய யாராலும் முடியாது. தன்னிடம் இருப்பது அனைத்தையும் கொடுத்துவிட கூடிய வள்ளல். அவனின் விருப்பம் போலவே உயிர் பிரிந்தது. சிவராத்திரி இரவு கோயிலில் பூஜை செய்தவனின் உயிர், வீட்டுக்கு வந்ததும் பிரிந்தது என்றால் அது எத்தனை பெரிய பாக்கியம். மூன்று நாட்களுக்கு முன்னால் பேசிய ஒருவன் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 


 


எதிர்பாராத விவேக் மரணம் :


விவேக்கும் நானும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ஒன்றாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்தோம். உடனே அவனுக்கு இப்படி ஒரு மரணம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை. அவனுடைய மகன் இறந்த போது அதே கூடத்தில் வைத்து தான் நான் புதுத்துணி மாறிவிட்டேன். அதே போல விவேக் உடலுக்கும் நான் தான் வேஷ்டி கட்டிவிட்டேன்.


பஞ்சு அருணாச்சலம், குமரிமுத்து, இயக்குநர் பாலச்சந்தர் இப்படி பலரின் இறப்பையும் நான் அருகே இருந்து பார்த்துள்ளேன். 


 



 


ஸ்ரீவித்யாவின் துக்கம் :


தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீவித்யா, புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவங்க இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் எனக்கு போன் செய்து பேசினாங்க. தன்னுடைய கடைசி ஆசையாக நடிகர் ஒருவரை பார்க்கணும் என கேட்டுக்கிட்டாங்க. ஆனால் அது வேண்டாம்னு நானே சொல்லிட்டேன். சொத்து, கார், பங்களா என எல்லாம் இருந்தும் நான் அனாதையா தான் சாகனும்னு ரொம்ப சங்கடத்துடன் பேசினாங்க ஸ்ரீவித்யா. நீ என் கவலைப்படுற அரசாங்கம் உன்னை பாத்துக்கும் என சொன்னேன், அதே போல அவர் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். 


 



 


மீன் குழம்புக்கு ஆசைப்பட்ட பத்மினி :


நாட்டியப் பேரொளி பத்மினி அம்மா எனக்கு லேண்ட்லைன் போனில் இருந்து போன் பண்ணி “எனக்கு மீன் குழம்பு சாப்பிடணும் என ஆசையா இருக்கு”னு சொன்னாங்க. நான் நாளைக்கு வாங்கிட்டு வரேன் அம்மா என சொன்னனேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ராகினி அம்மாவோட பொண்ணு லட்சுமி எனக்கு போன் பண்ணி “அம்மா உங்ககிட்ட மீன் குழம்பு கேட்டார்களா? தயவு செஞ்சு வாங்கி கொடுக்காதீங்க. அவர்களுக்கு உடம்பு சரியில்லை. அது எல்லாம் கொடுத்தா ரிஸ்க், அதனால வாங்கி கொடுக்காதீங்க”னு  சொல்லிட்டாங்க. அடுத்த நாள் அவங்க இறந்துட்டாங்கனு நியூஸ் வந்துச்சு. “ச்ச அவங்க கேட்டத வாங்கிக்கொடுத்து இருக்கலாமே” என தோணுச்சு.    


சினிமாவில் இருக்கிறவங்களோட வாழ்க்கையே அவ்வளவு தான். வாய்ப்புகள் கிடைக்கலனா காணாம போயிடுவாங்க. மேக்கப் போடுற வரைக்கும் தான் மதிப்பு. அதுக்கு அப்புறம் யாரும் சீண்ட கூட மாட்டாங்க” என மிகவும் கனத்த இதயத்துடன் தனக்கு நெருக்கமானவர்கள் மறைவு குறித்து பகிர்ந்து இருந்தார் மனோபாலா.  


இறுதியில் கல்லீரல் பாதிப்பால் தனது 69வது வயதில் உயிர் இழந்தார் மனோபாலா.