நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 28). இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வாகனம் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று  இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வரும் வழியில் கீழ முன்னீர் பள்ளம் பகுதியில் உள்ள சந்தை பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து தனது  நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த கார் ஒன்றில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் கண் இமைக்கும் நேரத்தில் வீரபுத்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்த வீரபுரத்தின் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அதனை பார்த்த நண்பர்கள் மற்றும் சாலையில் இருந்தவர்கள் உடனடியாக வீரபுத்திரனை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 


இக்கொலை தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கொலை குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அதோடு கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 28 வயதுடைய வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நெல்லையில் கடந்த ஓரிரு மாதங்களில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். காவல்துறையினர் கொலை சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இக்கொலையை கண்டித்து கீழ முன்னீர்பள்ளத்தில் வீரபுத்திரனின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.