இயக்குநர் மிஸ்கின் என்றாலே சர்ச்சைப் பேச்சுக்குத் துளியும் பஞ்சமிருக்காது, உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் சைக்கோ என்னும் திரைப்படத்தை இயக்கியவர் தற்போது பிசாசு-II படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆண்டிரியா நடிக்கும் இந்தத் திரைப்படம் வெளியீடுக்காக நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இசையமைப்பாளர் இளையராஜா உடனான தனது உறவு பற்றி மனம் விட்டுப் பேசியுள்ளார். அவரது நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






பேட்டியில் மனம் திறந்திருக்கும் மிஸ்கின்,”அவர் எனக்கு அப்பாதான். இந்த தமிழ் சினிமாவில் எல்லோரும் அவருக்குக் கீழ்தான்.அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அப்பாவாகவே இருந்தாலும் உடன்பாடு இல்லையென்றால் அதைச் சுட்டிக்காட்டிதான் ஆக வேண்டும். சைக்கோ திரைப்படத்தில் “உன்ன நெனச்சு நெனச்சு” பாடலுக்கு மூன்றாவது இடையிசை மாற்றிக் கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். எனக்கு சித் ஸ்ரீராம் பாட வேண்டும் என விருப்பம்.அவர் சித் பாடவே கூடாது எனச் சொல்லிவிட்டார். இப்படி நிறைய கருத்து முரண்பாடுகள். என் அப்பாவாகவே இருந்தாலும் என் படத்தில் அவர் டெக்னீஷியன்தான்.


நான் தான் படம் முழுக்க முழுக்க இயக்கப் போகிறேன்.எனக்குதான் படத்தின் விவரங்கள் தெரியும். மேலும் படத்தில் கார்த்திக் ராஜாவால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை.அதனால் நானே இசை சார்ந்து சில வேலைகளில் ஈடுபடவேண்டியதாக இருந்தது. எனக்கு யுவனுடன் சேர்ந்து படத்தை உருவாக்குவதில் விருப்பமில்லை. அவருக்கு திறமை இருந்தாலும் என் படத்து அவர் செட்டாகவில்லை. ராம் படங்களுக்கு நன்றாகவே பொருந்திப் போவார். மாடர்னான கம்போஸர். எக்ஸ்ட்ரார்டினரி சாங்ஸ் கொடுக்கறாரு.ஆனால் எனக்கு ராஜா மாதிரி ஒரு கம்போஸர் போதும்” எனக் கூறியுள்ளார். 


பிசாசுக்கும் காதல் வரும் , அதுவும் மென்மையானதாக இருக்கும் என மாற்பட்ட கோணத்தில் இவர் எடுத்திருந்த பிசாசு முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மிஸ்கின் தனது படத்தின் போஸ்டர்களிலோ , டிரைலர்களிலோ நடிகர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரை பதிவு செய்வதில்லை இவர் படங்களில் இளையராஜா பெயர் இடம்பெறாதது கூட அண்மையில் சர்ச்சையானது இங்கே குறிப்பிடத்தக்கது.