நகைச்சுவை பட்டிமன்றம் புகழ் திண்டுக்கல் ஐ.லியோனி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ள பன்னிக்குட்டி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


ஜூலை 8ல் பன்னிக்குட்டி ரிலீஸ்:


கிருமி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அனுச்சரண் இயக்கத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர்  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பன்னிக்குட்டி. இப்படத்தில் திண்டுக்கல் ஐ லியோனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன்  விஜய் டிவி ராமர் மற்றும் தங்கதுரை, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ண குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் 2019ம் ஆண்டிலேயே முடிவடைந்துவிட்டாலும், படம் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. வரும் ஜூலை 8ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், பன்னிகுட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுளது.



கங்கா கௌரியில் அறிமுகம்:


இப்படத்தில் குறிப்பிடத்தகுந்த விஷயம் “பட்டிமன்ற நாயகன்” என்று அழைக்கப்படும் திண்டுக்கல் லியோனியின் ரீ எண்ட்ரி தான். பட்டிமன்றம் என்றால் சாலமன் பாப்பையாவுக்கு நிகராக பெரும் புகழ்பெற்றவர் திண்டுக்கல் லியோனி. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான இவர் தனது நகைச்சுவை மிகுந்த பேச்சால் பிரபலமானார். 1997ம் ஆண்டு புத்தாண்டில் வெளியான, இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் அருண்விஜய், மந்த்ரா, வடிவேலு நடிப்பில் உருவான ”கங்கா கௌரி” திரைப்படத்தில் அருண் விஜயின் தந்தையாக லியோனி நடித்திருந்தார். இப்படம் சரியாக போகாததால் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். எனினும், பட்டிமன்றங்களிலும், அரசியலிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்து வந்தார் லியோனி. அவருக்கு திமுக கொள்கைப்பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதோடு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.


லியோனி ரீ எண்ட்ரி:


இதற்கிடையில் தான், பன்னிக்குட்டி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் லியோனி. இப்படத்தில் கோடங்கி கதாப்பாத்திரத்தில் லியோனி நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரே லியோனியின் குரலில் “For Every action there is an equal and opposite reaction” என்ற அறிவியல் விதியுடன் ஆரம்பிக்கிறது. இப்படமானது, கடந்த 2019ம் ஆண்டே எடுக்கப்பட்டுவிட்டலும், இப்போது தான் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, திரைப்படங்களில் தீவிரமாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.






சின்னத்திரை அறிமுகம்:


ஸீ தமிழில் தேவயானி உளிட்ட பலரது நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை கதாப்பாத்திரத்தில் லியோனி அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.