இன்றைய சினிமா இதுவரையில் காணாத ஒரு வளர்ச்சியை எட்டியுள்ளது. தியேட்டர்களில் வெளியான பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை டிஜிட்டல் நிறுவனங்கள் பல கோடி கொடுத்து கைப்பற்றி வருகின்றன. படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாவதற்கு முன்னரே டிஜிட்டல் நிறுவனங்கள் முந்திக்கொண்டு படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி விடுகின்றன. இதற்கு கடும் போட்டியே நிலவி வருகிறது. அந்த வகையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத 'பத்துதல' மற்றும் 'தங்காலன்' மற்றும் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'லவ் டுடே' படங்களின் ஓடிடி உரிமைகளை கைப்பற்றியுள்ளது பிரபல டிஜிட்டல் நிறுவனங்கள். இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
'பத்துதல' படத்தின் ஓடிடி ரைட்ஸ் கைப்பற்றியது யார் ?
கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'மஃப்ட்டி' திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாக்கப்பட்டுள்ளது 'பத்துதல' . மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 26 கோடிக்கு கைப்பற்றியுள்ளது அமேசான் நிறுவனம். இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 40 - 50 கோடி என சொல்லப்படும் நிலையில் ஓடிடி உரிமை மூலமே படத்தின் பாதி பட்ஜெட்டை வசூல் செய்துவிட்டனர் படக்குழுவினர்.
விக்ரமின் 'தங்கலான்' :
அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள 'தங்கலான் ' திரைப்படம். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் எல்லையை மீறி நடிக்கும் நடிகர் விக்ரம் இப்படத்தில் ஒரு ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் திரையரங்க ரிலீசுக்கு பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய 'லவ் டுடே' :
மேலும் சில தினங்களுக்கு முன்னர் 'கோமாளி' பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் 6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையும் கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.