பிக்பாஸ்... தமிழ்நாட்டுக்கு நல்ல பரிட்சயமான ரியாலிட்டி ஷோ. 5வது சீசனை நெருங்கியிருக்கிறது. இதற்கு முந்தைய 4 சீசன்களும் செம ஹிட். அந்த நிகழ்ச்சிக்கு போட்டியே இல்லை, இல்லாமல் இருந்தது என்பது தான் உண்மை.
அதற்கு ஈடுகொடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் பல வெவ்வேறு நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்தும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் சந்தித்தது எல்லாம் தோல்வி தான். ஆனால், ஜீ தமிழ் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ள சர்வைவர் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆட்டிப்பார்த்ததா என்று தெரியவில்லை; ஆனால் களத்தில் போட்டி போடுகிறது என்பது மட்டும் உண்மை.
பிக்பாஸில் கமல், சர்வைவரில் அர்ஜூன். இதை கடந்து நிறைய வித்தியாசங்கள் அந்த போட்டிகளுக்கு உண்டு. இரண்டும் வெவ்வேறு விதமான அம்சங்களை கொண்ட விளையாட்டுகள், எதிலிருந்து அவை இரண்டும் வேறுபடுகின்றன என்பதை பார்க்கலாம்...
பிக்பாஸ் | சர்வைவர் |
சொகுசான பங்களாவில் போட்டியாளர்கள் | கரடுமுரடான வசதி இல்லாத தீவில் போட்டியாளர்கள் |
ருசியான உணவு மூன்று வேளையும் | உப்பு கூட வழங்கப்படாத பட்டினி வாழ்க்கை |
பெட்டி பெட்டியாக ஆடைகள் அனுமதி | ஒருவருக்கு இரு ஆடைகள் மட்டுமே அனுமதி |
உறங்க, குளிக்க, காலைக்கடனுக்கு தனி அறைகள் | உறங்குவதற்கு கூட அறை கிடையாது |
காலையில் எழுந்ததும் ஆடி, பாட பாடல் ஒலிபரப்பு | எப்போது விடியும், எப்போதும் இருட்டும் என தெரியாது |
வீட்டைச் சுற்றிலும் கேமராக்கள் | போட்டியாளர்களை பின்தொடரும் கேமராமேன்கள் |
ஒவ்வொருவருக்கும் ஒரு மெத்தை | எல்லாம் தரை மயம் |
அப்பட்டமாக மைக் இருப்பது தெரியும் | எங்கு மைக் இருக்கிறது என்றே தெரியாது |
தனிநபர் டாஸ்க்குகள் | ஒட்டு மொத்த அணிக்கான டாஸ்க்குகள் |
வழி நடத்த பிக்பாஸ் என்கிற குரல் பின்தொடரும் | முழுக்க முழுக்க போட்டியாளரின் வழிநடத்தல் |
பொதுமக்கள் ஓட்டெடுப்பில் வெளியேற்றம் | போட்டியாளர்களே நேரடியா வாக்களிக்கும் முறை |
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் சர்வைவர் மாறுபடுகிறது. அதனால் தான் அந்த நிகழ்ச்சி தனித்துவமான நிகழ்ச்சியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. அட்வென்சர் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் யாரையும் இழுக்கும். ஆனால் அது தத்ரூபமாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதை சர்வைவர் நிகழ்த்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே, இங்கும் போட்டி, பொறாமை, வஞ்சம், புறம் பேசுதல் எல்லாம் உண்டு. ஆனால் அதை கடந்து அதன் டாஸ்க்குகள் சுவாரஸ்ய ரகம். பிக்பாஸ் கூட சும்மா இல்லை. கமல் என்கிற கேப்டனின் சுமையில் தள்ளாடாமல் விரைந்து ஓடும் கப்பல் தான். வித்தியாசமான போட்டியாளர்களால் மனிதனின் மனதோடு விளையாடும் விளையாட்டு என்பதால் அது என்றுமே தனி இடத்தை தக்க வைத்திருக்கும். இப்போதைக்கு இந்த இரு நிகழ்ச்சிகளும் தமிழ் ரசிகர்களின் இரவுகளை இதமாக்குகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை!