கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இந்த நிகழ்ச்சியின் சீசன் 13 தற்போது நடைபெற்று வருகிறது. ஆடியன்ஸ் போல் லைஃப்லைன் கோரோணா நோய்த்தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர், சிறு சிறு மாற்றங்களையும் கொண்டுவந்துள்ள இந்நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் ஃபரா கான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இருவரும் அமிதாப் பச்சனுடன் மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.



அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி பேசினார்: "2014 ஆம் ஆண்டு தான் எனக்கு மனநல பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்டேன். அப்போது நான் மும்பையில் இருந்தேன். என்னைப் பார்க்க எனது பெற்றோர் பெங்களூருவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திரும்பிக் கிளம்பும்போது  அழுதேன். எனது அழுகை வித்தியாசமாக இருப்பதாக அம்மா கூறினார். நான் அப்படி அழுது பார்த்தது இல்லை என்று கூறிய அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். நான் அம்மா சொன்னதைத் தயங்காமல் செய்தேன். சில மாதங்களுக்குப் பின்னர் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன். மன நலம் பொறுத்தவரை ஒருமுறை நீங்கள் குணமாகிவிட்டால் அதை மறந்துவிடக் கூடாது. ஆகையால் தான்  என் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். அதனால், என்னால் இப்போது இயல்பாக இருக்க முடிகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காலகட்டம் மிகவும் மோசமானது. எனக்கு வெளியில் செல்ல பிடிக்கவில்லை. எந்த வேலையிலும் நாட்டமில்லை. யாரையும் சந்திக்கவும் விரும்பவில்லை. ஏன், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றியது. ஆனால்  சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மீண்டுவிட்டேன். அதன் பின்னர் தான் மன பாதிப்புகள் மீது உள்ள சமூக புறக்கணிப்பை தகர்க்கும் வகையில் ஓர் அமைப்பை உண்டாக்கி செயல்பட்டு வருகிறேன்.


நாம் மற்ற நோய்களுக்கு சிகிச்சை எடுக்கத் தயங்குவதில்லை. ஆனால், மனநல சிகிச்சை பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதனால், 2015ல் தொடங்கப்பட்ட அமைப்பு தான் லிவ் லவ் லாஃப் அமைப்பு ( Live Love Laugh Foundation). எனக்கு இப்படி ஒரு மன அழுத்த நோய் ஏற்பட்டால், அதுபோல் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடும் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வில் ஒரே ஒருவரையாவது மன அழுத்தத்தில் இருந்து மீட்க முடியும் என்றால் அது மிகப்பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். இப்போது மன நோய்களுக்கு எதிரான சமூக புறக்கணிப்பை விலக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறேன்." என்று தீபிகா கூறினார்.



தீபிகாவின் பேச்சைக் கேட்ட அமிதாப், நீங்கள் இப்போது நலமாக இருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார். இதற்கிடையில், தீபிகா படுகோன் மற்றும் ஃபாரா கான் குரோர்பதி சீசன் 13 நிகழ்ச்சியில் மிகவும் விளையாட்டாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங் பற்றி புகார் செய்தார், அவர் தனக்கு காலை உணவு செய்து தருவதாக அளித்த வாக்குறுதியை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறினார். அமிதாப் பச்சனுடன் ஒன்றாக படப்பிடிப்பில் இருந்தபோது செட்களில் தனது உணவைத் திருடி செல்வார் என்று தீபிகா விளையாட்டாக கூறினார்.