சென்னை, திருவான்மியூரில் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்க்கூடிய கோயி்ல்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


“ அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எப்படி பணியாற்றுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட செயல்பாபு என்றுதான் அழைக்க வேண்டும். அந்த பெயருக்கு முழு தகுதிப்படைத்தவராக அவர் விளங்குகிறார்.


சட்டப்பேரவையில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியவும் இல்லை. இன்னும் சட்டசபை கூட்டத்தொடர் முடியவும் இல்லை. 13-ந் தேதிதான் முடிகிறது. சட்டப்பேரவை முடிவதற்குள் ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான்.



எள் என்றால் எண்ணெய் :


எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள் என்போம். ஆனால், சேகர்பாபுவை பொறுத்தவரையில் எள் என்று கூட சொல்லத்தேவையில்லை. அதற்குள் எண்ணெய்யாக வந்து நிற்பார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கின்றனர். அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.


இந்து சமய அறநிலையத்துறை கொடுத்து வைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அமைச்சராக அவர் இருக்கிறார். கோயில் நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை நிறைவேற்றப்பட்டுள்ளது.




இறைவனைப் போற்றக்கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் அவர் யாரும் செய்யாத  வகையில் 120 அறிவிப்புகளை வெளியிட்டார். அது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. புதிய தேர்கள் வலம் வரவுள்ளன.


அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள்:


அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டவுடன், அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகும். அந்த வரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய 12,959 கோயில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.


இதனால், ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். மன்னிக்க வேண்டும். இதை நான் செலவு என்று சொல்லவில்லை. இதன்மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள். ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதி 2 லட்ச ரூபாயாக அதிகரித்து தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.


படிப்படியாக நிறைவேற்றப்படும் :






சட்டப்ரேவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13ம் தேதிக்கு பிறகு படிப்படியாக நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளோம். வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. அதனை நானே மாதந்தோறும் கண்காணிக்கவிருக்கிறேன். ஒவ்வொரு திட்டத்திற்கும் முன்னுரிமை தந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபட உள்ளேன். அனைத்து துறைகளையும் முந்திவிட்டு செயல்பாடு தன் துறை திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கிவிட்டார்.”


இவ்வாறு அவர் பேசினார்.