தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் சினிமா கேரியரில் ஜனவரி 12ம் தேதி மிக முக்கியமான நாளாகும். அவர் நடித்த 4 படங்கள் இதே தேதியில் ரிலீசாகியுள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 


போக்கிரி 


கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் தான் “போக்கிரி”. இந்த படத்தின் மூலம் நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா இயக்குநராக அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெற்றி பெற்ற போக்கிரி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அசின், வடிவேலு, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர், ஆனந்த ராஜ், ஸ்ரீமன் என பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் விஜய்க்கு இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. 200 நாட்கள் ஓடிய போக்கிரி படம் விஜய் சினிமா கேரியரில் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் ஒரு பாடலில் பிரபுதேவா விஜய்யுடன் இணைந்து நடனமாடியிருந்தார். 


வில்லு 


போக்கிரி படத்தின் வெற்றிக்குப் பின் 2009 ஆம் ஆண்டு நடிகர் விஜய் - இயக்குநர் பிரபுதேவா கூட்டணி 2வது முறையாக இணைந்த படம் தான் “வில்லு”. இந்த படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ், கீதா, தேவராஜ், ரஞ்சிதா என பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமையத்த இந்த படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, குஷ்பூ ஆகியோர் நடனமாடியிருந்தனர். வில்லு படம் சொதப்பலான திரைக்கதையால் தோல்வியை தழுவியது. 


ALSO READ | Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி? சிவகார்த்திகேயனின் “அயலான்” ட்விட்டர் விமர்சனம் இதோ!


நண்பன்


ரசிகர்களின் ரொம்ப நாள் எதிர்பார்ப்பாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் விஜய் முதல்முறையாக கூட்டணி அமைத்தார். இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக் உரிமையை பெற்று அதை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் படமாக எடுத்தார். இப்படத்தில் விஜய், இலியானா டி குரூஸ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன், எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த நண்பன் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


பைரவா


தன்னை வைத்து அழகிய தமிழ் மகன் படம் எடுத்த இயக்குநர் பரதனுடன் விஜய் 2வது முறையாக இணைந்த படம் “பைரவா”. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. கல்வியில் நடக்கும் ஊழலை பற்றி பேசிய பைரவா படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Varisu vs Thunivu: இன்றோடு ஓராண்டு நிறைவு.. வாரிசு, துணிவு படத்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோதனை..!