ரசிகர்களிடையே "தல" என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், திரையுலகிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் செய்தித்தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி என ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில், ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்பவர்கள் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். அஜித்தின் இந்த திடீர் செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் அஜித்தின் இந்த செய்தியை கிண்டலடிக்கும் விதமாக பல்வேறு பதிவுகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. குறிப்பாக அஜித் நாணயத்துக்கு மூன்று பக்கம் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டும் பலர், நாணயத்துக்கு இரண்டு பக்கம் தான் என பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் நாணயத்துக்கு எத்தனை பக்கம்? மூன்று பக்கம் என அஜித் குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? பார்க்கலாம்.
பூவா? தலையா? என்பது பொதுவான பேச்சுதான். ஒரு முடிவை குறிப்பிட இரண்டில் ஒன்று எனக் குறிப்பிடுவதை பூவா? தலையா? என்போம். ஆனால் சிறு வயதில் நாணயத்தை செங்குத்தாக நிற்க வைத்து நாம் விளையாடுவது நினைவிருக்கிறதா? பூப்பக்கத்திலும் நிற்கவில்லை. தலை பக்கத்திலும் நிற்கவில்லை, அப்பொது அந்த நாணயம் எந்த பக்கத்தில் நின்றது? யோசித்துப்பார்த்தால் ஒன்று புரியும். அந்த நாணயம் நின்றது நாணயத்தின் மூன்றாவது பக்கத்தில் இருந்து. அதைத்தான் எட்ஜ் என்கிறோம்.
அமெரிக்க தொழிலதிபர், மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ரிச் டாட், புவர் டாட் என்ற புகழ்பெற்ற புத்தகத் தொடரினை எழுதிய ராபர்ட் கியோசாகி நாணயத்தின் பக்கங்கள் குறித்து பேசியுள்ளார். நாணயத்துக்கு பூ, தலை, முனை என்ற 3 பக்கங்கள் உண்டு. அதில், நாணயத்துக்கு பூ, தலை, முனை என்ற 3 பக்கங்கள் உண்டு. மாறுபட்ட கண்ணோட்டங்களை புரிந்துக்கொள்ளும் உங்கள் திறன் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் நீங்கள் மதித்து ஏற்றுக்கொள்கிற ஒரு விஷயத்தை பெறும் திறன் மிகப்பெரிது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாணயத்தின் 3 பக்கம் என்ற சொல்லாடலை ஒரு விவாதத்தின் போது குறிப்பிடும் ஒரு வழக்காகவும் வைத்துள்ளனர். இரு தரப்பு ஒரு விவாதத்தில் இருந்தால் அதன் நியாயமோ, உண்மையோ இரு தரப்பில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அது மூன்றாவது பக்கமாகக் கூட இருக்கலாம் என்று கூறுவதற்கு 'நாணயத்துக்கு 3 பக்கங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். நாணயத்தை சுண்டும் போதெல்லாம் அது பூவிலோ, அல்லது தலையிலோதான் விழுகிறது. அதனால் நாணயத்தின் பக்கம் இரண்டு என நாம் முடிவுக்கு வந்துவிடுவோர் செங்குத்தாக நிற்கும் நாணயத்தை கண் முன்னே நினைத்துப்பார்த்துக்கொள்ளவும் என்று பரபரக்கிறது இணைய உலகம்.