தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமராவதி மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான அவர் பல்வேறு வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் திரையலகிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் செய்தித்தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி. ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்று மூன்று தரப்பினரும் உள்ளனர். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமாரை பொதுவெளியில் காண்பது என்பது மிகவும் அரிதான விஷயம். அவர் சமூகவலைதளங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் ஏதேனும் வெளியானாலே அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். இந்த நிலையில், திரையுலகில் தனது 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ள செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாரி… வேற மாரி..” என்ற பாடல் வெளியானது. இரண்டாண்டுகள் காத்திருந்த ரசிகர்கள் இந்த பாடலை தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் புதிய அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.