விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை (19.07.2023) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம்:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு என எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம் கூட்டவாசுதேவ் மேனன் கூட்டணியில் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று (18/-7/2023) காலை 11 மணிக்கு இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியானது. இந்த வீடியோவில் துருவ நட்சத்திரம் ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்பது போன்றாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டரில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார். துப்பாக்கிகள் கொண்டு டைட்டில் கார்ட் போடப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, ”அவன் போறா பிளைட்டுல, இப்ப பறந்துபுட்டான் ஐட்டுல, உன்ன போட போறான் காட்டுல, அவன் கையில இன்னும் நீ மாட்டல” என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. முழு பாடல் நாளை வெளியாகும் எனவும் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தொடரும் ஏக்கம்..!
டீசரை தொடர்ந்து “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் பல ஆண்டுகள் கழித்து தான் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகுமா இல்லையா என குழம்பி தவித்தனர்.
தூசி தட்டப்படும் துருவ நட்சத்திரம்:
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் "His Name is John" நாளை வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யுமா என்பது நாளை தெரிய வரும்.