கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பான  “Lets Get Married” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


தோனியின் தயாரிப்பு 


கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார், இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. 


அதேசமயம் யாரும் எதிர்பாராத வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட்  தயாரிப்பு நிறுவனத்தில்  முதல் படம் தமிழில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. 


இந்த போஸ்டரை தோனி வெளியிட்ட நிலையில் மோதிரம் ஒன்றிற்குள் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில்  “Lets Get Married” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


படப்பிடிப்பு நிறைவு


இதற்கிடையில்,  “Lets Get Married” படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வு ஒன்று சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்போது படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையோடு பகிர்ந்து கொண்டனர். மேலும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் நாள் வரை என முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.  சுவாராஸ்யமான திரைக்கதை,  உணர்வுகள், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை “Lets Get Married” பார்வையாளர்களுக்கு வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான பிரியன்ஷூ சோப்ரா கூறுகையில் , ''Lets Get Married” தமிழில் எங்களின் முதல் படமாக இருந்ததாலும், சிறப்பான திட்டமிடல் காரணமாக எங்களது அனைத்து திட்டமும் துல்லியமாக நிறைவேறியது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு விரைவில் வழங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.