தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படம் உலகெங்கிலும் ஜூலை 26ம் தேதி வெளியானது.


சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், வரலட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் வெளியான இந்த கேங்ஸ்டர் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.    



நடிகர் தனுஷின் 50வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியானது. அண்ணன், தங்கை, தம்பி என குடும்ப கதையாக ஆரம்பித்து பின்னர் அப்படியே கேங்ஸ்டர் கதையாக பழி வாங்கும் ஒரு கதையாக தடம் மாறுகிறது.


தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாளே ரூ 12.5 கோடி வசூலித்தது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல்களை வெளியிட்டுள்ளது.




ஒரு சில ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும் அந்த எதிர்ப்புகளையும் கடந்து படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் தனுஷ் என்பதை காட்டிலும் நடிகராக தனுஷ் தன்னுடைய 100% உழைப்பை பதிவு செய்துள்ளார்.


படம் முழுக்க ஒரு ரத்த களரியாக இருந்தாலும் ரஹ்மானின் பின்னணி இசை ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தின் கூடுதல் சிறப்பம்சங்கள். 


ராயன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் ஒன்றை ராயன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நடக்கும் போதே இயக்குநர் பார்ட் 2 எடுப்பது குறித்து யோசனை செய்தார். ஸ்கிரிப்டிலேயே பார்ட் 2காக கதை எழுதி வைத்துள்ளார் என்ற சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.