தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கில திரைப்படங்களிலும் நேரடியாக நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.


மீண்டும் இந்தியில் தனுஷ்:


இந்த நிலையில், தனுஷ் தற்போது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். தனுஷ் அடுத்ததாக இந்தி படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் பெயர் தேரி இஷ்க் மெயின் ஆகும். ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை ஹிமான்சு சர்மா தயாரிக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே 2013ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தில் ஏற்கனவே இணைந்திருந்தனர். அந்த படத்தில் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா இதே நாளில் 2013ம் ஆண்டு வெளியானது.


இதுதொடர்பாக, தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராஞ்சனாவின் 10 ஆண்டுகள். சில படங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இது எங்கள் அனைவர் வாழ்க்கையையும் மாற்றியது. ராஞ்சனா காவியம் உருவானதற்கு காரணமான அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ராஞ்சனாவின் உலகத்தில் இருந்து ஒரு கதை தேரி இஷ்க் மெயின். எனக்காக எப்படிப்பட்ட பயணம் காத்திருக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இது ஒரு சாகசமாக எங்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் என்பது மட்டும் உறுதி. நன்றி” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






மீண்டும் ராஞ்சனா கூட்டணி:


ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர், அபய்தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ராஞ்சனா, இந்த படம் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தனுஷிற்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சுமார் 34 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 94 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஹிமான்சு சர்மா கதை எழுதிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.


2002ம் ஆண்டு முதல் நடித்து வரும் தனுஷ் முதன்முதலாக 2013ம் ஆண்டு இதே தேதியில் ராஞ்சனா படம் மூலமாகவே இந்தியில் அறிமுகமானார். அதன்பின்பு, ஷமிதாப், அத்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்தார். 2021ம் ஆண்டு அத்ராங்கி ரே படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியில் நடிக்க உள்ளார்.


தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதற்கு முன்பு வெளியான நானே வருவேன் படம் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், திருச்சிற்றம்பலம் அவருக்கு பெரும் வெற்றியை தந்தது.


மேலும் படிக்க: 10 Years Of Raanjhanaa: தனுஷின் பாலிவுட் எண்ட்ரீ .. தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்தி படம்.. 10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ராஞ்சனா’..!


மேலும் படிக்க: Rachitha Mahalakshmi : ஆபாச மெசேஜ்... மிரட்டும் கணவர்.. நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு வந்த ரச்சிதா மஹாலட்சுமி..