மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸ் சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் சிறை கைதிகள் உயிரிழந்துள்ளனர். பெண்கள் சிறையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஹோண்டுரஸ் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து வடமேற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள தாமராவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 40 க்கு மேற்பட்ட பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தேசிய போலீஸ் விசாரணை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யூடி மோரா தெரிவித்துள்ளார். 


இந்த வன்முறையின்போது பெரும்பாலான உயிரிழப்புகள் உடல் கருகி பலியானதாகவும், மீதமுள்ளவர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சோதனைக்கு பிறகு இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். 


கைதிகளின் குடும்பங்களுக்கான சங்கத்தின் தலைவரான டெல்மா ஆர்டோனெஸ் கூறுகையில், “ சிறைச்சாலையில் பேரியோ 18 மற்றும் மாரா சல்வத்ருச்சா 13 என்ற இரு கும்பல்களுக்கு இடையே திடீரென வன்முறை ஏற்பட்டது. அப்போது பேரியோ 18 கும்பலைச் சேர்ந்த கைதிகள் ஒரு செல் தடுப்புக்குள்புகுந்து மற்ற கைதிகளை சுட்டுக் கொன்று, தீ வைத்து எரித்தனர்” என தெரிவித்தார். 


டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சுமார் 900 நபர்கள் தங்கியுள்ளனர். இது அந்த சிறையின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், வன்முறையின்போது ஏராளமான கைதிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தின்போது சிறையின் குறிப்பிடத்தக்க பகுதி முழுமையாக இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 


இதுகுறித்து ட்வீட் செய்த ஜனாதிபதி சியோமாரா காஸ்ட்ரோ, “ சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களின் கொடூரமான கொலை குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார். 






இதேபோன்ற சம்பவம் கடந்த 2019ம் ஆண்டிலும் நடந்தது. இரண்டு ஆண் சிறைச்சாலைகளில் நடந்த மோதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நேற்று வன்முறைக்கு பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மத்திய அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சிறைக் கலவரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.