நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி தினம் கொண்டாடப்பட்டது. இன்றைய சினிமாவில் பண்டிகை காலம் என்றால் 2 அல்லது 3 படங்களுக்கு மேல் வெளியாவது இல்லை. காரணம் பல காரணங்களால் தியேட்டர்கள் மூடப்பட்டது என சொல்லப்பட்டாலும் அன்றைய காலக்கட்டம் போல இப்போது பண்டிகை கால திரைப்படங்கள் இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக மோதும் என்பதால் தியேட்டர்கள் களைக்கட்டும்.
அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் இரட்டை வேடத்தில் நடித்த அழகிய தமிழ்மகன், சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த வேல், ஜீவன் நடித்த மச்சக்காரன், சத்யராஜ், ப்ரித்விராஜ், சந்தியா நடித்த கண்ணாமூச்சி ஏனடா, ஆகிய படங்களோடு களம் கண்டது தனுஷின் “பொல்லாதவன்” திரைப்படம். ஆனால் அப்போது விஜய், சூர்யா படத்தை விட சூப்பர் ஹிட்டானது பொல்லாதவன் படம். இதை தனுஷ் ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என சொல்லலாம். இயக்குநர் வெற்றிமாறன் அறிமுகம், தனுஷின் மாஸ் படம், ஜி.வி.பிரகாஷின் இசை என இப்படம் மாஸாக அமைந்தது.
தனுஷூடனான அறிமுகம்
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தார் வெற்றிமாறன். அந்த நேரத்தில் பாலு மகேந்திரா தனுஷை வைத்து ‘அது ஒரு கனாக்காலம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தனுஷூடனான அறிமுகம் வெற்றிமாறனுக்கு கிடைக்கிறது. அவர் ஒரு கதையை தனுஷிடம் சொல்லி நடிக்க சம்மதம் பெறுகிறார். ஆனால் நீண்ட இழுபறிக்கு நடுவே பல போராட்டங்கள் கடந்த பிறகும் தனுஷ் வெற்றிமாறன் கதை மீது நம்பிக்கை வைத்து நடிக்க காத்திருக்கிறார். இப்படித்தான் பொல்லாதவன் படம் உருவானது.
இளைஞர்களை கவர்ந்த பல்சர் பைக்
1948 ஆம் ஆண்டு வெளியான “பைசைக்கிள் தீவ்ஸ்” என்ற இத்தாலிய படத்தின் கருவைப் போல இப்படம் இருந்தாலும் தனது நண்பரின் தொலைந்து போன பைக்கை தேடப்போகும் போது கிடைத்த அனுபவங்களால் இப்படம் உருவானதாக சொல்லப்பட்டது. சொல்லப்போனால் தனது மாமனார் ரஜினிகாந்த் படத்தின் தலைப்பை முதன்முதலில் பெற்று தனுஷ் நடித்தது இந்த படம் தான். படத்தில் ஹீரோயினாக திவ்யா ஸ்பந்தனா நடிக்க பானுப்பிரியா, கிஷோர், கருணாஸ், சந்தானம், அஞ்சு, டேனியல் பாலாஜி என பலரும் இடம் பெற்றிருந்தனர். பிரபு என்னும் நடுத்தர வயது இளைஞர் கதாபாத்திரத்தில் தனுஷ் சூப்பராக செட் ஆகியிருப்பார்.
இவர்களை தவிர்த்து பல்சர் பைக் படத்தில் முக்கிய கேரக்டராக இடம் பெற்றது. சொல்லப்போனால் அதுதான் கதைக்களமே. தான் ஆசைப்பட்டு வாங்குன பைக்கால் மூணு பேர வெட்டிட்டேன் என தனுஷின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பமாகும் படத்தின் தொடக்க காட்சி ரசிகர்களை அப்படியே கட்டிப்போட வைக்கும். இப்படத்திற்கு பின் இன்று வரை பல்சர் பைக் இளைஞர்களின் பேவரைட் பைக்காக உள்ளது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். அதேபோல் இப்படத்தில் காதல் காட்சிகளை மிக இயல்பாக நம் அனைவரின் வாழ்க்கையில் நடந்தைப் போல காட்சிப்படுத்தி எப்போது பார்த்தாலும் நம்மை அறியாமலேயே ஒரு சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
சிக்ஸ் பேக் தனுஷ்
வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் குடி, கும்மாளம் என மகிழ்ச்சியாக இருக்கும் பிரபு ஒரு கட்டத்தில் வீட்டில் திருடவும் செய்கிறார். இதனால் அப்பாவுடன் ஏற்படும் பிரச்சனையில் தான் பைக் வாங்க ஆசைப்படுவதாக கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அவரது விருப்பப்படி பைக் கிடைக்கிறது. பின்னாலேயே வேலை, காதலி என சகலமும் வர பிரபு வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பைக் திருடுபோகிறது. இது பிரபு கத்தி எடுக்கும் நிலைக்கு தள்ளுகிறது என கமர்ஷியல் சினிமாவில் காட்டப்பட்டதை மாற்றி ஹீரோவை விட கதை தான் இப்படத்தின் ஹீரோவாக இருக்கும். கிளைமேக்ஸ் காட்சியில் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு அனைவரையும் மிரள வைத்தார்.
ரசிக்க வைத்த ட்யூன்
பொல்லாதவன் படம் என்றால் பல்சர் பைக்கிற்கு கொடுக்கப்பட்ட மியூசிக் முக்கிய கவனம் பெற்றது. பலரின் ரிங்டோனாக இன்றும் உள்ளது. ரஜினி கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல் இப்படத்திற்காக ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து படிச்சு பார்த்தேன், மின்னல் கூத்தாடும் மழைக்காலம் ஆகியவை ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ஹிட்டடித்தது. இதைத்தவிர வேல்ராஜ், எடிட்டர் கிஷோர் பல கலைஞர்களின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும். இப்படியான பொல்லாதவன் படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ‘ஹீரோவுக்கான கதை’ என்பதை மாற்றி ‘கதைக்கான ஹீரோ’ என்ற நிலையை கொண்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.