பகுதி சூரிய கிரகணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் உலகின் சில பகுதிகளில் இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். 


இந்தியாவில் இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.29 மணிக்கு முடிவடைக்கிறது. தமிழ்நாட்டில் முழு சந்திர கிரகணம் மதியம் 3.46 மணிக்கு தொடங்கி மாலை 5.11 மணி வரை நடைபெறும். 


மாலை 5.30 மணிக்கு சந்திரன் உதயமாகும் என்பதால் சிறித்து நேரத்தில் முடிந்துவிடும் என்பதால் சென்னையில் முழு கிரகணத்தை பார்க்க இயலாது.


இன்று நிகழும் சந்திர கிரகணம் நாட்டின் அனைத்து இடங்களிலும் தெரியும் என்றும், முழு மற்றும் பகுதி வடிவ கிரகணத்தை நாட்டின் கிழக்கு பகுதியில் காணமுடியும் என்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


சந்திர கிரகணம் : இன்று கோயில் நடைகள் மூடல் 


சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடை மூடப்படுகிறது. இன்று காலை 8 மணிமுதல் இரவு 7.20 மணிவரை கோயிலின் கதவுகள் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிற்பகல் 1 மணிக்கு நடை மூடப்பட்டு இரவு 7 மணிக்கு திறக்கப்படுகிறது.


இன்று பகல் 12 மணிமுதல் மாலை 7 மணிவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடை சாத்தப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும் எனவும் அன்று காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கிரகணம் என்றால் என்ன..? 


சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திப்பே கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்போது அது சந்திர கிரகணம் என்றும் அழைப்படும்.