எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம்தான் விடுதலை. இந்த படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். துணைவன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். கிரைம் திரில்லராக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் விடுதலை படத்தில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பாடலை பாடுவதற்காக சிறப்பு பயிற்சியை அளித்துள்ளாராம் இளையராஜா , இதற்காக காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரையில் நின்றபடியே பயிற்சி அளித்திருக்கிறார் இளையராஜா. எப்போதும் இளையராஜாவுடன் இணைந்து வேலை செய்வது தங்களுக்கு பயமாக இருக்கும் என தெரிவிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் , தனக்கு ஜாலியாக இருந்தது என்கிறார் வெற்றிமாறன்.
இளையராஜாவை விடுதலை படத்திற்கு ஒப்பந்தம் செய்ததற்கு பிறகு விசாரணை மற்றும் அசுரன் ஆகிய தனது இரண்டு படங்களை பார்க்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.அதன் அடிப்படையில் ஒரு காதல் தீம் கொண்ட இசையை உருவாக்கினாராம் இளையராஜா. அதன் பிறகு விடுதலை படத்தின் முதல் ஷெடியூலை படமாக்கிய பின்னர் அதனை இளையராஜாவிற்கு போட்டு காட்டியுள்ளார் வெற்றி மாறன் , உடனே முன்னர் இருந்த தீம் வேண்டாம் என புதிய பாடலை தனது பியானோவில் வாசிக்க ஆரமித்துவிட்டாராம். மேலும் காட்சிகளையும் இசையையும் ஒருங்கே இணைத்த இளையராஜா, இதற்காக பாடல் வரிகளை நானே எழுதி விடுகிறேன் என வெற்றி மாறனிடம் கூறியிருக்கிறார். அதற்கு வெற்றி மாறனும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.
விறு விறுப்பாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாவ கதைகள் புகழ் பவானி கதாநாயகியாகவும் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறாராம். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.முன்னதாக படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் ‘வாத்தியாராக’ விஜய் சேதுபதி என்றும் ‘கதாநாயகனாக’ சூரி என்றும் குறிப்பிட்டிருந்தனர் படக்குழு. அதன்படி சூரியின் வழிக்காட்டியாக படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.