Happy Birthday Dhanush : தமிழ் கதாநாயகர்களின் பட்டியலில் மிகவும் வித்தியாசமான ஒரு நடிகர், பன்முக திறமையாளர் மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ஆளுமை நிறைந்த நடிகர் தனுஷ் 40வது பிறந்தநாள் இன்று.
2002-ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் இயக்குநராக செல்வராகவனும், நடிகராக தனுஷும் அறிமுகமான படம். குழப்பத்தோடு திரையரங்கம் சென்ற ரசிகர்களுக்கு திரையில் ஹீரோவாக ஒரு ஒட்டு மீசை வைத்த ஒடிசலான பையன் வந்து நின்றதை பார்த்து சிரித்தது ஒரு கூட்டம். ஏராளமான விமர்சனங்களுக்கு உட்பட்ட தனுஷ் அடுத்து உளவியல் ரீதியாக சிக்கல் கொண்ட ஒரு கதாபாத்திரமாக மீண்டும் அண்ணண் செல்வராகவன் படத்திலேயே நடித்த படம் 'காதல் கொண்டேன்'. சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும் ரசிகர்களால் அவரை ஒரு ஹீரோ ரேஞ்சில் வைத்து பார்க்க இயலவில்லை.
இப்படி ஏராளமான உருவ கேலிகளுக்கு உட்பட்ட தனுஷ் தனது விமர்சனத்தையே வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கட்டுகளாக எடுத்து கொண்டு படிப்படியாக தனது திறமையை மெருகேற்றி இன்று ஒரு சாதனையாளராக திகழ்கிறார்.
'திருடா திருடி' திரைப்படம் மூலம் தனது ஆளுமையை நிரூபிக்க துவங்கினார் தனுஷ். 'மன்மத ராசா' என்ற ஒரே பாடல் தான் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையே ஆட வைத்தார். இப்படி தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிரூபித்து வளர்ந்த தனுஷுக்கு ஒரு அடையாளம் கொடுத்தது வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படம். ஒரு உண்மையான நடிகனுக்கு கட்டுமஸ்தான உடல்வாகு முக்கியமில்லை என அவரை பார்த்து நகைத்த அனைவருக்கும் படத்தின் வெற்றியின் மூலம் சரியான பதிலடி கொடுத்தார்.
ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஜானர்களிலும் இறங்கி தூள் கிளப்பிய தனுஷுக்கு தொடர் கமர்சியல் வெற்றிகள் தொடர்ந்தன. ஒவ்வொரு படமும் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக அமைந்தன. இயக்குனர்களின் ஆழ்மனதில் இருக்கும் உணர்ச்சியை காட்சிப்படுத்தும் ஒரு தத்ரூபமான நடிகராக இயக்குநர்களின் அபிமான நடிகராக விளங்கினார் தனுஷ். இளம் வயதிலேயே தேசிய விருதை தட்டி செல்லும் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்.
'ரஞ்சனா' படம் மூலம் பாலிவுட் மட்டுமின்றி 'தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் ஃபகிர்' படம் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்தாலும் நிலையாக பயணித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். அசுரன் படம் மூலம் அவரின் அசல் திறமை வெளிப்பட்டது. ஒரு நடிகரால் ஒரே நேரத்தில் இத்தனை விதமான முகபாவங்களையும், உடல்மொழியையும் வெளிப்படுத்த முடியுமா என அனைவரையும் நடிப்பின் மூலம் வியக்கவைத்தவர்.
ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து ஏரியாவிலும் தூள் கிளப்பி தனது மனமுதிர்ச்சியையும், விசாலமான பார்வையையும் தனது படைப்புகளின் மூலம் நிரூபித்துவிட்டர் தனுஷ்.
இவர் சாதிக்கமுடியுமா என சந்தேகிக்கும் பார்வையோடு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான தனுஷ் இன்று தனது 40வது வயதில் ஒரு சாதனையாளராக திகழ்கிறார். இந்த பிறந்தநாளில், அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது ஏபிபிநாடு
இதையும் படிங்க..