நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி
வாத்தி படத்தில் நடித்ததை அடுத்து, சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷூம் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன்.30ஆம் தேதி கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது தனுஷ் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தனுஷின் அடுத்த படம்
நடிகர் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான கால்ஷீட்டை ஏற்கெனவே தனுஷ் கொடுத்துவிட்ட நிலையில், மற்றொருபுறம் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!