மாமன்னன் படம் மிகப்பெரிய பாதிப்பை எனக்கு கொடுத்துச்சு என நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ட்ரெய்லர் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. இப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


மிகப்பெரிய பாதிப்பை கொடுத்த படம் 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படம் பற்றி பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், “மாமன்னன் படம் மிகப்பெரிய பாதிப்பை எனக்கு கொடுத்துச்சு. மாரி செல்வராஜ் படத்துல நடிக்கிறதுக்காக, அவர் கமிட்டான படங்களின் தயாரிப்பாளர்கள் கிட்ட போய் கேட்டுக்கிட்டேன். எல்லோரும் சொன்ன மாதிரி வடிவேலுவை வைத்து ஒரு 15 நாட்கள் ஷூட் பண்ணினார். அதன்பிறகே மாமன்னன் எவ்வளவு முக்கியமான படம் என்பதை புரிய வைத்தது. படம் பார்க்கிறவர்களுக்கும் அந்த தாக்கம் இருக்கும்.


இதைத் தவிர இடைவேளைக் காட்சி ஒன்று இருக்கும். அது எடுக்கும்போதே இது எப்படி சென்சாரில் ஒத்துக் கொள்வார்கள் என கேட்டேன். ஆனால் சென்சாரில் சில மாற்றங்கள் கொடுத்து ஓகே சொல்லி விட்டார்கள். அப்படி மனதில் பாரமாக்கும் காட்சிகள் மாமன்னனில் இருக்குது. சில காட்சிகள் நான் அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் போதும் கூட மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த 15 நிமிட காட்சிகளை ஷூட்டிங்கில் இருந்த அத்தனை பேரிடமும் காட்டி அதன் சீரியஸ் தன்மையை உணர்த்தினார்” என தெரிவித்துள்ளார். 


முக்கிய வேடத்தில் பன்னிக்குட்டி 


அடுத்ததாக பன்னிக்குட்டியுடன் இருக்கும் காட்சிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பன்னிக்குட்டி பார்க்கத்தான் அழகா க்யூட்டா இருக்கும். அதை கையாள்வது மிகவும் கடினம். கத்திக்கிட்டே இருக்கும். பயமா இருக்கும். மாரி செல்வராஜ், இணை, துணை இயக்குநர்கள் எல்லாம் அதை என்னிடம் கொடுத்து எப்படி கையாள வேண்டும் என சொல்லிக் கொடுத்தார்கள். இந்த படம் முழுக்க 35 பன்னிகள் கூடவே தான் நான் டிராவல் பண்ணேன். ட்ரெய்லரில் நான் கையில் வைத்திருக்கும் பன்னிக்குட்டி உட்பட 3 பன்னிகள் படம் முழுக்க வரும். அதுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.


இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எப்படி எனக்கு செட்டாகும் என கேட்டேன். ஆனால் மாரி மீது இருந்த நம்பிக்கை வாங்க பண்ணலாம் என சொல்ல வைத்தது" என கூறினார். தொடர்ந்து, ஷூட்டிங்கில் நீங்கள் நடிப்பதோடு, டெக்னீக்கலான விஷயங்கள் பற்றி தெரிஞ்சிக்க நினைப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்’. ஆனால் மாமன்னன் படத்தில் எல்லா வேலையும் மாரி செல்வராஜ் தான் பார்த்தாரு" என்றார்.