சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை பற்றின தகவல்களை வழங்கும் இணைய தளமாக செயல்பட்டு வருகிறது ஐஎம்டிபி நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொவரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது ஐஎம்டிபி. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


 



 


அந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த ஆண்டு நடிகர் தனுஷிற்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் ' தி கிரே மேன்' மற்றும் கோலிவுட்டில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், மாறன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து டாப் 10 தர வரிசையில் முதல் இடத்தை பிடித்து விட்டார் நடிகர் தனுஷ்.


இரண்டாவது இடத்தில் பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் தக்கவைத்துள்ளார். இந்த ஆண்டில் அவரின் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா-1, ஆர்ஆர்ஆர், கங்குபாய் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இடம் பிடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஆக்கிரமித்துவிட்டார். 


 







நான்காவது இடத்தில் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டோலிவுட் முன்னணி ஸ்டார் ராம் சரண். ஐந்தாவது இடத்தை பிடித்து விட்டார் நடிகை சமந்தா. இந்த ஆண்டு அவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் மற்றும் யசோதா திரைப்படம் வெற்றி பெற்றுள்ளன. 


அடுத்தடுத்து இருக்கும் இடங்களை கைப்பற்றியுள்ளனர் விக்ரம் வேதா படத்திற்காக ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, டோலிவுட் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜுன். கடைசியாக பத்தாவது இடத்தில் இருக்கிறார் கேஜிஎஃப்-2 புகழ் யாஷ்.   


ஐஎம்டிபி தளத்தில் முதல் 10 இடத்தை பிடித்த இந்திய நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ள நடிகர் தனுஷ் இதன் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎம்டிபி  தளம் கிட்டத்தட்ட 20 கோடி பார்வையாளர்களை பெற்றிருக்கும் பிரபலமான தளமாகும்.