டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன் , ஷாலினி பாண்டே , அருண் விஜய் , ராஜ்கிரண் , சமுத்திரகனி , ஆர் பார்த்திபன் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் எளிய ஃபேமிலி என்டர்டெயினர் படமாக உருவாகியிருக்கிறது இட்லி கடை திரைப்படம். வேலையில்லா பட்டதாரி , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களைப் போல் தனுஷின் கரியரில் இட்லி கடை திரைப்படம் ஹிட் படமாக அமையுமா என்பதை படத்திற்கு ரசிகர்கள் வழங்கியுள்ள விமர்சனங்களில் பார்க்கலாம்.
இட்லி கடை திரைப்பட விமர்சனம்
சிறு வயதில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனை கதையாக இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ஒரு பக்கம் கிராமத்து வாழ்க்கை , இன்னொரு பக்கம் நகரத்து வாழ்க்கை என தொடங்குகிறது கதை. முதல் 30 நிமிடங்களில் உணர்ச்சிகரமாக கதை சொல்கிறார் இயக்குநர் தனுஷ். முதல் பாதி எமோஷனலாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் பின்னணி இசை தனி கவனம் பெறுகிறது.
கதை உணர்ச்சிவசமாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் வலிந்து திணிக்கப்படுகிறது. எப்போதும் போல் நடிப்பில் அசத்தியிருக்கிறார் தனுஷ்
நித்யா மேனன் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தனுஷ் தந்தையாக வரும் ராஜ்கிரண் உணர்ச்சிவசமான நடிப்பால் கவர்கிறார். தனுஷ் மற்றும் அருண் விஜயின் இடையிலான மோதலுடன் முடிகிறது முதல் பாதி. சின்ன சின்ன காட்சிகளில் தனுஷ் உணர்வுப்பூர்வமாக இப்படத்தை அனுகியிருக்கிறார் தனுஷ். ஃபேமிலி ஆடியன்ஸ் பார்த்து ரசிக்க ஏற்ற வகையில் உருவாகியுள்ளது இட்லி கடை.