Trump On Gaza War: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியது தானே என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.

Continues below advertisement

ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 20 அம்ச அமைதி ஒப்பந்தத்திற்கு பதிலளிக்க ஹமாஸ் அமைப்பிற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் முன்வைக்கும் ஒப்பந்தமானது போர் நிறுத்தம், ஹமாஸால் பிணைக் கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், ஹமாஸை ஆயுதங்களை கைவிடுத்தல் மற்றும் இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இது ட்ரம்ப் தலைமையிலான போருக்குப் பிந்தைய இடைக்கால அதிகாரத்தையும் முன்மொழிகிறது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ட்ரம்ப், " ஒப்பந்தத்தில் அரபு நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன. இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளது. நாங்கள் ஹமாஸுக்காகக் காத்திருக்கிறோம், ஹமாஸ் அதைச் செய்யப் போகிறதோ இல்லையோ? அது நடக்கவில்லை என்றால், அது மிகவும் சோகமான முடிவாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

Continues below advertisement

ஹமாஸின் முடிவு என்ன?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, "ஹமாஸ் அதன் அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளுக்குள், பாலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது என்றும், சிக்கலான சூழ்நிலைகள் காரணமாக விவாதங்கள் பல நாட்கள் நீடிக்கலாம்” என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலால் காஸாவில் போர் தூண்டப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,219 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கையில், காஸாவில் தற்போது வரை 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சீண்டும் ட்ரம்ப்

இதனிடையே, உலகம் முழுவதிலுமிருந்து பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் வரவழைத்த ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களுக்கு மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து தானே என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அங்கு பேசுகையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி போய்க் கொண்டிருந்தன. நான் அவர்கள் இருவரையும் அழைத்தேன். இந்த விஷயத்தில், நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தினேன். அவர்கள் ஏழு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். நீங்கள் இதைச் செய்தால், எந்த வர்த்தகமும் இருக்கப் போவதில்லை என்று நான் சொன்னேன், நான் மோதலை நிறுத்தினேன். அது நான்கு நாட்களாகப் பொங்கி எழுந்தது," என்று டிரம்ப் கூறினார்.

”வரி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை

தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் எந்தப் போர்களையும் விரும்பவில்லை. அதனால் தான் நான் பல போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். காஸா ஒப்பந்தமும் வெற்றி பெற்றால், எட்டு மாதங்களில் எட்டு போர்களை தீர்த்த வைத்தது போல் ஆகிவிடும். அது மிகவும் நல்லது. யாரும் அதைச் செய்ததில்லை.  வரிகள் என்பது ஆங்கில அகராதியில் எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மிக அழகான வார்த்தை. ஆனால், ஊடக விமர்சனங்களுக்குப் பிறகு எனது நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொண்டேன். இப்போது அது எனக்கு மிகவும் பிடித்த ஐந்தாவது வார்த்தை" என ட்ரம்ப் விவரித்துள்ளார். இந்தியா மீண்டும் மீண்டும் மறுத்து வந்தாலும், பாகிஸ்தான் உடனான மோதலை நிறுத்தியது தானே என சுமார் 40 முறை ட்ரம்ப் பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளார்.