நடிகர் தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.


தனுஷின் 50வது படம்:


நடிகர் தனுஷ் தற்போது தன் 49ஆவது படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கி கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 


இந்நிலையில், கோலிவுட், பாலிவுட் என அனைத்து  சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பால் ஈர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ள நடிகர் தனுஷின் தனுஷின் 50ஆவது படம் குறித்த சினிமா வட்டாரத்தினர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷின் 50ஆவது படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.


எஸ்.ஜே.சூர்யா:


தனுஷின் 50ஆவது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை தனுஷே இயக்க உள்ளதாகவும், துஷாரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும் வட சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், விஷ்ணு விஷால் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷுடன் ஏற்கெனவே கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.


கேப்டன் மில்லர்:


மேலும், தனுஷ் ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு பவர் பாண்டி படத்தை இயக்கிய நிலையில், இந்தப் படம் தனுஷின் இரண்டாவது படமாக இருக்கும்.  வாத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், இப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மதுரை, மேலூர் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் வன விலங்குகள் தொல்லை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.


இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல், கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து  முன்னதாக நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.